கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வை கலாய்த்த நெட்டிசன்கள்!

கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வை கலாய்த்த நெட்டிசன்கள்!

கேரளாவைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.கே.பிரசாந்த். இவர் இடதுசாரிக் கூட்டணியின் பிரதான கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற திருவனந்தபுரம் மாநகராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற இவர், திருவனந்தபுரத்தின் மேயர் ஆனார்.

அதன் பின்னர் 2019ல் வட்டியூர்க்காவு தொகுதியில் நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கட்சி தொண்டர்களோடும், பொது மக்களோடும் எளிமையாக பழகுபவர் என்பதால், திருவனந்தபுரம் மேயராக இருந்தபோது இவர், ‘மேயர் புரோ’ என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.

சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாகவும், பரபரப்பாகவும் இயங்கும் இவரை, முகநூலில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் மூன்றரை லட்சம் பேர். தொகுதியில், அரசு அதிகாரிகளையும், கட்சிக்காரர்களையும் கொண்டு ஏராளமான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, வளர்ச்சிப் பணிகளையும் இவர் மேற்கொண்டு வருகிறார்.

மீபத்தில் அவரது அதீதமான சமூக ஊடக செயல்பாடுகள் பொது மக்கள் மத்தியிலும், சமூக ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாயின. இதனால் கேரளாவைச் சேர்ந்த நெட்டிசன்கள் இவரை ரொம்பவே கலாய்த்து விட்டார்கள். அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா-இந்தியா கிரிக்கெட் போட்டியின்போது, நேரலையாக இவர் ஸ்கோர்களை அப்டேட் செய்தபடியே இருந்தார். இதுதான் நெட்டிசன்களின் இந்த சர்ச்சைக்கு வித்திட்டது.

‘பல்வேறு கிரிக்கெட் இணையதளங்கள் செய்யும் வேலையை ஒரு எம்.எல்.ஏ. எதற்கு செய்ய வேண்டும்? அவருக்கு மக்கள் பிரச்னைகள் பற்றியெல்லாம் அக்கறை இல்லையா?’ என்றெல்லாம் பதிவுகள் போட்டுத் தாக்கத் துவங்கிவிட்டார்கள்.

இவற்றைப் பார்த்த எம்.எல்.ஏ. பிரசாந்த், தான் தனது தொகுதி மக்களுக்காக செய்த பணிகளைப் பட்டியல் போட்டுவிட்டு, ‘என்னுடைய ஓய்வு நேரத்தில்தான், குறிப்பாக இரவு நேரத்தில்தான் நான் கிரிக்கெட், ஃபுட்பால் மேட்ச்களை பார்க்கிறேன். அதனால் எனது எம்.எல்.ஏ. பணிகள் எதுவும் தாமதமாவதும் இல்லை; தடை படுவதும் இல்லை’ என்று விளக்கம் கொடுத்து இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com