கொரோனாவுக்குப் பிறகு உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தும் மக்கள்.

கொரோனாவுக்குப் பிறகு உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தும் மக்கள்.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்று சொல்வார்கள். அந்த வகையில் ஒருவர் உடல் நலமுடன் இருந்தால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும். இப்போதே உடல் நலத்தில் அக்கறை செலுத்துங்கள் என எச்சரிக்கைமணி ஒலித்திருக்கிறது கொரோனா என்ற பெரும் தொற்று. இதனால் உடற்பயிற்சிக் கூடங்களுக்கு மக்கள் படையெடுப்பதும் அதிகரித்து வருகிறது. 

கொரோனா அடித்த எச்சரிக்கை மணியால் விழித்துக்கொண்ட மக்கள், உடல் நலனில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர். இதன் காரணமாக உடற்பயிற்சிக் கூடங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. பாடி பில்டிங் என்ற நோக்கம் குறைந்து, பிட்னஸ் என்ற நோக்கத்தில் ஜிம்மை நோக்கி பலர் படையெடுக்கின்றனர். ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை மையப்படுத்தி உடற்பயிற்சியில் ஈடுபடுகின்றனர்.

உடற்பயிற்சி செய்வது மூலம் நல்ல பலன் கிடைக்கிறது என அதில் ஈடுபடுவோர் கூறுகின்றனர். அதிக நேரம் செய்ய முடியவில்லை என்றாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடம் முதல், 1 மணி நேரம் வரை உடற்பயிற்சிக்காக செலவிடுவது நல்லதாகும். உடற்பயிற்சிக் கூடம் செல்ல முடியாதவர்கள், வீட்டிலிருந்தே தங்களால் இயன்ற உடற்பயிற்சியை செய்யலாம். வீட்டிலும் எங்களால் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்போர், நன்றாக வேற்கும்படி தினசரி நடைப் பயிற்சியையாவது செய்வது நல்லது. 

லாக்டவுன் சமயத்தில் பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே இருந்ததால், உடல் எடை அதிகரித்து விட்டது. பின்னர் அச்சமயத்தில் மக்கள் பெருந்தொற்றினால் பாதிப்பதைக் கண்டு பலருக்கு உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்பட்டு, உடற்பயிற்சிக் கூடங்களில் சேர்ந்ததாக பலர் சொல்கின்றனர். தற்போது உடற்பயிற்சி செய்ய வரும் அனைவருமே, தன் உடலை எவ்வித நோய்களும் அண்டாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வருகிறார்கள். 

உடற்பயிற்சி செய்வதால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கிறது. உடற்பயிற்சிக் கூடம் சென்று பாடி பில்டர் அளவுக்கு உடலை மாற்ற முடியவில்லை என்றாலும், தன் உடலுக்கு எவ்வித பிரச்சினைகளும் ஏற்படாத வகையில், ஆரோக்கியமாக பார்த்துக் கொள்வதற்கு சில பயிற்சிகள் செய்வதும் நல்லதுதான். இது நம்முடைய உடலையும் திடப்படுத்துகிறது. அதேசமயம் மனதளவிலும் ஒருவரை உறுதியாக மாற்றுகிறது என்கின்றனர் உடற்பயிற்சி செய்பவர்கள். 

எந்தத் தீமைக்குள்ளும் ஒரு நன்மை உண்டு என்பார்கள். அந்த வகையில் கொரோனா என்னும் கொடிய அரக்கன், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உரிய விழிப்புணர்வு விதைகளையும் விதைக்கத் தவறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com