நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதில் பயனில்லை!!

நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதில் பயனில்லை!!

தற்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் 65 வயதிலும், நாட்டில் உள்ள 25 உயர்நீதிமன்றங்களில் பணிபுரியும் நீதிபதிகள் 62 வயதிலும் ஓய்வுபெறுகின்றனர்.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதால் செயல்திறனற்ற நீதிபதிகளின் பணிக்காலம் தொடருமே தவிர பெரிதாக ஒரு பலனும் ஏற்பட்டுவிடாது. மேலும் அரசு ஊழியர்களும் இதேபோன்ற கோரிக்கைகளை முன்வைத்தால் அடுக்கடுக்கான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று நாடாளுமன்றக் குழுவிடம் நீதித்துறை தெரிவித்துள்ளது.

உயர் பதவி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளுடன் நீதிபதிகளின் ஓய்வு வயதை உயர்த்துவதை பரிசீலிக்கலாம் என்றும் நீதித்துறை தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டம் ஏதும் இல்லை என்று கடந்த ஜூலை மாதம் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

பா.ஜ.க. எம்.பி.யும் பீகார் முன்னாள் துணை முதல்வருமான சுஷில் மோடி தலைமையிலான பணியாளர், சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற குழுவிடம் இதுதொடர்பாக நீதித்துறை ஒரு விளக்கத்தை அளித்திருந்தது.

அதில் நீதிதுறையின் செயல்பாடுகள், சீர்திருத்தங்கள் மற்றும் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கியிருந்தது.

ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதால் சில செயல்படாத, குறைவாக செயல்படும் நபர்களுக்குத்தான் லாபம் தரும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

நிலுவையில் உள்ள வழக்குகளை குறைப்பது நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவருவதுடன் நீதிபதிகள் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதுடன் பரிசீலிக்கலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளது.

மாவட்ட நீதிமன்றங்கள், துணை நீதிமன்றங்களில் காலி இடங்களை நிரப்பி, நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்காமல், நீதித்துறையில் உயர் பதவிகளில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு நடவடிக்கைகளுடன் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது சரியாக இருக்காது என்றும் நீதித்துறை சுட்டிக்காட்டியுள்ளது.

நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதால் தீர்ப்பாயங்களில் ஓய்வுபெறும் நீதிபதிகளை அதிகாரிகள் மற்றும் நீதித்துறை உறுப்பினர்களாக நியமனம் செய்வதில் பாதிப்பு ஏற்படும். மேலும் இது தொடர் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கமிஷன்கள் இதே கோரிக்கையை எழுப்பக்கூடும். எனவே அரசு இந்த விவகாரத்தை முழுமையாக பரிசீலிக்க வேண்டும் என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com