ராஜஸ்தான்: காங்கிரஸின் அமைதித் தூதர் என்ன செய்யப் போகிறார்?

ராஜஸ்தான்: காங்கிரஸின் அமைதித் தூதர் என்ன செய்யப் போகிறார்?

ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை டிசம்பர் முதல் வாரத்தில்  ராஜஸ்தானில் நுழைகிறது.  ஆனால், அங்கேயோ முதலமைச்சர் அஷோக் கெலாட்டுக்கும், அவருக்கு எதிராக அரசியல் செய்யும் அதிருப்தி காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட்டுக்கும் மோதல் உச்சத்தில் இருக்கிறது.

ராகுல் காந்தி ராஜஸ்தானில் நடை பயணம் மேற்கொள்ளும்போது, இவர்கள் மோதலால் ரசாபாசமாக ஏதாவது ஆகிவிடுமோ என்று ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சியும் கவலையில் ஆழ்ந்துள்ளது.

இதற்காக, அங்கே சென்று, இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்த  அங்கே அனுப்பப்பட்டு இருக்கிறார்  ராகுலுக்கு மிகவும் நெருக்கமான கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான கே.சி. வேணுகோபால்.

வேணுகோபால் நடத்தவிருக்கும் கட்சியின் ஆய்வுக் கூட்டத்தில் அஷோக் கெலாட், சச்சின் பைலட் இருவருடன் ராஜஸ்தானின்  மற்ற முக்கிய காங்கிரஸ் தலைவர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

கெலாட், சச்சின் பைலட் இருவரும் ‘ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரவேண்டும்’ என்று நினைக்கிறார்கள். ஆனால், அவர்களில் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது? யாரைக் கழற்றி விடுவது?  என்பதை கறாராக முடிவெடுக்க கட்சித் தலைமை மிகவும் தயங்குகிறது.

சோனியாவே முன் மொழிந்தும் கூட காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்க கெலாட் ஆர்வம் காட்டவில்லை. அதற்குக் காரணம், கட்சித் தலைமை ஏற்பதற்காக ராஜஸ்தான் முதல்வர் பதவியை இழக்க அவர் தயாராக இல்லை என்பதுதான்.

அவர் கட்சிக்குத் தலைமை ஏற்று டெல்லி சென்றுவிட்டால், சச்சின் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிடுவார். அதன்பின் தன் நிலை “திரிசங்கு சொர்கம்தான்” என்ற பயம் அவருக்கு. 

அஷோக் கெலாட், சச்சினை “துரோகி” என்று வசை பாடுகிறார். அவரை எக்காரணம் கொண்டும் “முதல்வர் நாற்காலியில் அமர்த்தக் கூடாது” என்பது கட்சி மேலித்திடம் வலியுறுத்துகிறார்.

“இப்படி இருவரும் மோதிக்கொண்டால், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இருவரும் ஒருவர் காலை ஒருவர் வாரிவிட்டு, முதல்வர்  நாற்காலியை பா.ஜ.க.வுக்கு தாம்பாளத்தில் வைத்துக் கொடுத்துவிடுவார்கள்” என்று அடிமட்டத் தொண்டரும் கவலைப்படுகிறார். மேலிடமும் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com