

உலகில் முதன்முறையாக இந்திய ராணுவத்தில் ராம்ஜெட் தொழில்நுட்பம் பீரங்கி குண்டுகளில் பயன்படுத்தப்பட உள்ளது.ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் உள்ள பீரங்கி குண்டு சுடுதலுக்கான மையத்தில் இதற்கான சோதனை முயற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனால் உலகிலேயே இந்த தொழில்நுட்ப பயன்பாட்டை செயல்படுத்த போகும் முதல் ராணுவம் என்ற பெருமையை இந்தியா பெறுகிறது.
இந்திய ராணுவத்தில் உபயோகப்படுத்தப்படும் 155 மில்லி மீட்டர் அளவிலான பீரங்கி குண்டுகளை சுடுவதற்கு ராம்ஜெட் எஞ்சினை பயன்படுத்த முடிவாகியுள்ளது. இது தாக்குதல் வரம்பை 30-50% வரை அதிகரிக்கும்.பீரங்கி குண்டு ஏவப்பட்டவுடன் அது Mach 2 (ஒலியின் வேகத்தைப் போல இரண்டு மடங்கு) வேகத்தை எட்டும். அந்த வேகம் எட்டப்பட்டவுடன், ராம்ஜெட் எஞ்சின் தானாகவே காற்றை உள்ளிழுத்து, எரிபொருளை எரித்து கூடுதல் உந்துதலை (Thrust) வழங்கும். இந்த அதீத உந்துதல், நீண்ட தூரத்தில் உள்ள இலக்குகளையும் மிகத் துல்லியமாகத் தாக்க உதவும்.
மத்திய அரசின் 'ஆத்மநிர்பார் பாரத்' திட்டத்தின் கீழ், ராணுவத் தளவாடங்களை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளது.IIT மெட்ராஸ் மற்றும் DRDO இணைந்து இந்த ராம்ஜெட் பீரங்கி குண்டை உருவாக்கியுள்ளன.இந்தத் தொழில்நுட்பம் முழுமையாக உருப்பெற்று பயன்பாட்டிற்கு வரும்போது, இந்திய ராணுவம் உலக அரங்கில் ஒரு மைல்கல்லை எட்டும்.
உலகில் முதன்முறையாக ராம்ஜெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பீரங்கி குண்டுகளை இந்திய ராணுவம் விரைவில் களமிறக்க உள்ளது. அதற்காக தொடர்ந்து பரிசோதனை மற்றும் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த தொழில்நுட்பம் உருப்பெற்றவுடன், அது இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் சேர்க்கப்படும்.