
பொருளாதார ரீதியில் வலிமையான ஒரு நாடு தொடர்ச்சியாக அதன் வருவாயை அதிகரிப்பது இயல்பான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்திய வங்கிகள் ஒரு வருடத்தில் மிகப்பெரிய லாபத்தை வருவாயாக ஈட்டி சாதனை செய்துள்ளன. கடந்த நிதியாண்டைப் போல வேறு எந்த நிதியாண்டிலும் வங்கிகள் இவ்வளவு பெரிய லாபத்தை பெற்றதில்லை.
நிமிட அடிப்படையில் வங்கிகளின் லாபத்தை கணக்கிட்டால், ஒரு நிமிடத்திற்கு இந்திய வங்கிகள் சுமார் ₹34 லட்சம் நிகர லாபத்தை பெறுகின்றன. இந்த லாப விகிதம் அதற்கு முந்தைய நிதியாண்டில், ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார் ₹27 லட்சமாக இருந்தது. இதன் மூலம் முந்தைய நிதியாண்டை விட தற்போது ₹7 லட்சம் அதிகமாக லாபம் கிடைத்து வருகிறது.
கடந்த நிதியாண்டில் (2024-25) பொதுத்துறை வங்கிகளின் மொத்த லாபம் 26% ஆண்டு வளர்ச்சியுடன், ₹1.78 லட்சம் கோடியை எட்டியுள்ளது. 2023-24 நிதியாண்டில் 12 பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ.1.41 லட்சம் கோடியாக இருந்தது. 2024-25 நிதியாண்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் மொத்த லாபம் சுமார் ₹37,100 கோடி அதிகரித்துள்ளது. பங்குச் சந்தைகளில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளால் ₹1,78,364 கோடி லாபம் ஈட்டபட்டுள்ளது .
இந்திய வங்கிகளின் லாப விகிதத்தில் பாரத ஸ்டேட் வங்கி (SBI) முன்னணியில் உள்ளது. உலகின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகவும் , உலகில் அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்ட முதல் வங்கியான இது , அரசு வங்கிகளின் மொத்த வருவாயில் 40% அதிகமான பங்களிப்பை தருகிறது. பாரத ஸ்டேட் வங்கி 2023-24 நிதியாண்டில் ₹61,077 கோடி லாபம் ஈட்டியிருந்தது. கடந்த நிதியாண்டில் எஸ்பிஐயின் லாபம் 16% உயர்ந்து ₹70,901 கோடியாக உள்ளது.
அடுத்த இடத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ,102 % அதிகரித்த லாபத்தினால் அதன் வருவாய் ₹16,630 கோடியாக உள்ளது. இந்தியன் வங்கியின் நிகர லாபம் 35.4 % அதிகரித்து ₹10,918 கோடியாக உள்ளது. பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 45.9 % அதிகரித்து ₹9,219 கோடியாகவும் உயர்ந்துள்ளது. புனேவை சேர்ந்த மகாராஷ்டிரா வங்கியின் நிகர லாபம் முந்தைய நிதியாண்டில் 36.1% அதிகரித்து ₹5,520 கோடியாக உள்ளது.
நிகர லாபத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்டு வளர்ச்சியைப் பதிவு செய்த வங்கிகளில், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம் 48.4% அதிகரித்து ரூ.3,785 கோடியாகவும், யூகோ வங்கியின் நிகர லாபம் 47.8 % அதிகரித்து ரூ.2,445 கோடியாகவும், பஞ்சாப் & சிந்து வங்கி நிகர லாபத்தில் 71% அதிகரித்து ரூ.1,016 கோடியாக உள்ளது.
2017-18 நிதியாண்டில் ₹85,390 கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்த பொதுத்துறை வங்கிகள், 2025 நிதியாண்டில் சாதனை லாபத்தை ஈட்டியுள்ளன. 2024-25 ஆம் ஆண்டில் 12 பொதுத்துறை வங்கிகளின் லாபம் அதிகரித்துள்ளது.
வங்கித் துறையில் அரசாங்கம் சில சீர்திருத்தங்களை செய்து லாபகரமாக மாற்றியுள்ளது. அரசாங்கம் ஒரு விரிவான 4R உத்தியை செயல்படுத்தியுள்ளது. இதில் வெளிப்படையான செயல்படாத சொத்துக்களை (NPAs) அடையாளம் கண்டு மீட்டெடுப்பு நடவடிக்கையின் மூலம் மறு முலதனமாக்கியது.
இந்த உத்தியின் கீழ், கடந்த ஐந்து நிதியாண்டுகளில் 2016-17 முதல் 2020-21 வரை பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதனத்திற்காக அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ₹3,10,997 கோடியை செலுத்தியுள்ளது. இதன் மூலம் நஷ்டத்தை அடைந்த வங்கித் துறை திவாலாவது தடுக்கப்பட்டு அதன் லாபம் உயரத் தொடங்கியது.