

செல்லுபடியாகும் UDID (தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டை) அட்டையை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகள் (PwDs), அவர்களுக்காகவே ஒதுக்கப்பட்ட முன்பதிவற்ற பெட்டிகளில் பயணிக்க இரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரெயில் சேவை. அந்த வகையில் இந்திய ரெயில்வே நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரெயில்களை இயக்குகிறது, இதில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். பேருந்து, விமானம் போன்றவற்றை விட ரெயில்களில் டிக்கெட் கட்டணம் குறைவு என்பதால் தான் ரெயில் பயணம் பெரும்பாலான மக்களின் விருப்பத்தேர்வாக உள்ளது.
குறிப்பாக பாதுகாப்பான பயணம், களைப்பின்றி தூக்கிக்கொண்டு பயணம் செய்வது, டாய்லெட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளதால் லட்சக்கணக்கான பயணிகள் ரெயிலில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். குறிப்பாக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளுக்கு ரெயில் பயணம் மிகவும் வசதியாக உள்ளது என்றே சொல்லலாம். அதேசமயம், பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரெயில்வே
சமீபகாலமாகப் பயணிகளின் வசதிக்காகப் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருவதுடன் அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தியும் வருகிறது. மேலும்ரெயில் பயணத்தை மேலும் வசதியாகவும் சௌகரியமாகவும் மாற்றுவதற்காக இந்திய ரெயில்வே தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்து வருகிறது.
அந்தவகையில் ரெயில்களில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளி பயணிகளின் பயணத்தை அதிக பாதுகாப்பானதாகவும், கண்ணியமானதாகவும் மாற்றும் நோக்கில் ஒரு மிகமுக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது இனி UDID (Unique Disability ID) அட்டை வைத்திருப்பவர்கள் ரெயில்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முன்பதிவற்ற சிறப்புப் பெட்டிகளில் எவ்விதத் தடையுமின்றி பயணிக்கலாம் என்று அறிவித்துள்ளது.
UDID என்பது மாற்றுத்திறனாளிகள் அரசு சலுகைகளை எளிதாகப் பெற உதவும் ஒரு டிஜிட்டல் ஆவணமாகும். இந்த கார்டு ரெயில்வே சலுகைகள், அரசு மருத்துவமனை சேவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பெட்டிகளில் பயணம் செய்ய பயன்படுகிறது.
மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்காகவே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட SLRD மற்றும் LSLRD (இரண்டாம் வகுப்புடன் இணைந்த சரக்கு மற்றும் பிரேக் பெட்டி - மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பிரிவுடன்) பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. செல்லுபடியாகும் பயண அனுமதிச் சீட்டை (travel authority) வைத்திருக்கும் பட்சத்தில், மாற்றுத்திறனாளிகளுக்காகவே பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட முன்பதிவற்ற SLRD அல்லது LSLRD பெட்டிகளில் பயணிக்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
பல சமயங்களில் இந்தப் பெட்டிகளில் உடல்நலமுள்ள நபர்களும், முறையற்ற பயணிகளும் அமர்ந்து கொண்டு, உரிய மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் தராதது குறித்து நீண்டகாலமாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், இதனைத் தெளிவுபடுத்தும் விதமாக ரெயில்வே வாரியம் தற்போது புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மேலும் இனி இந்தப் பெட்டிகளில் அனுமதியின்றி பயணிக்கும் நபர்கள் (மாற்றுத்திறனாளிகள் அல்லாதோர்)மீது 1989 ரெயில்வே சட்டத்தின் கீழ் கடும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதன்படி, மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையால் (DEPWD) வழங்கப்பட்ட செல்லுபடியாகும் UDID கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் ரெயில்களில் பயணக் கட்டணச் சலுகை (Concessional fare) பெறுவதற்கான அங்கீகாரம் பெற்ற மாற்றுத்திறனாளிகள் இந்தப் பெட்டிகளில் பயணிக்கலாம். அதாவது, மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுத் துறையால் (DEPwD) வழங்கப்பட்ட செல்லுபடியாகும் UDID கார்டு கொண்ட மாற்றுத்திறனாளிகள், அத்துடன் இந்திய ரெயில்வேயின் கீழ் சலுகைக் கட்டணங்களுக்குத் தகுதியுடையவர்கள் ஆகிய அனைவரும் 'உண்மையான பயணிகள்' (bona fide passengers) எனக் கருதப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் பெட்டிகளில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிகள் மேற்கண்ட அடையாள அட்டைகளுடன், முறையான பயணச்சீட்டு வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகும் என்று இந்தியன் ரெயில்வே தெளிவுபடுத்தி உள்ளது.
ரெயில்வேயில் இ-டிக்கெட் எடுக்கவும், சலுகைகளைப் பெறவும் பயன்படும் 'திவ்யாங்ஜன் கார்டு' (EPICS) பெற இந்த UDID கார்டு ஒரு அடிப்படை ஆவணமாகப் பயன்படுகிறது.