

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரெயில் சேவை. அந்த வகையில் இந்திய ரெயில்வே நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரெயில்களை இயக்குகிறது, இதில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். பெரும்பாலானோர் நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலும் ரெயில்களில் டிக்கெட் பதிவு செய்து பயணிக்கவே விரும்புகின்றனர். ரெயில்களில் டிக்கெட் செலவு மிக மிகக் குறைவு. இதனால்தான் பேருந்து, விமானம் போன்றவற்றை விட ரெயில் பயணத்தை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர்.
குறிப்பாக பாதுகாப்பான பயணம், களைப்பின்றி தூக்கிக்கொண்டு பயணம் செய்வது, டாய்லெட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளதால் லட்சக்கணக்கான பயணிகள் ரெயிலில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். பயணிகளின் வசதிக்காக இந்தியன் ரெயில்வே பல்வேறு புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருவதுடன் அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தியும் வருகிறது. அந்த வகையில் ரெயில் பயணத்தை மேலும் வசதியாகவும் சௌகரியமாகவும் மாற்றுவதற்காக இந்திய ரெயில்வே தொடர்ந்து பல மாற்றங்களைச் செய்து வருகிறது.
இதற்கிடையே இந்திய ரெயில்வே புதிதாக அறிமுகப்படுத்திய இ-பேன்ட்ரி (e-Pantry) சேவை மூலம் ரெயில் பயணிகள் 25 மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் ஆன்லைனில் உணவு மற்றும் தண்ணீரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம். இதன் மூலம் பயணிகள் தாங்கள் விரும்பும் உணவை நேரடியாக அவர்களின் இருக்கையில் பெறுவார்கள்.
இந்நிலையில் ரெயில் பயணிகளுக்கான உணவு விஷயத்தில் தொடர்ந்து புகார்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. குறிப்பாக, வந்தே பாரத் மற்றும் சதாப்தி போன்ற பிரீமியம் ரெயில்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அடிக்கடி புகார்கள் எழுந்த நிலையில் இந்தியன் ரெயிவே, ஒரு டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பு மூலம் உணவு சேவைகளை கண்காணிக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக, ரெயில்வே வாரியம் ரெயில் நிலைய அளவிலான அதிகாரிகள் முதல் ரெயில்வே வாரியம் வரை உள்ளவர்களை இணைத்து ஒரு சிறப்பு வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி, அதன் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளது.
ரெயில் மதாத் செயலியின் தரவுகளின்படி, பயணிகளிடமிருந்து பொதுவாக தூய்மை, உணவு மற்றும் பான சேவைகள் தொடர்பாக மட்டும் தினமும் சுமார் 35 புகார்கள் பெறப்படும் அதேவேளையில் பல பயணிகள் சமூக ஊடகங்களிலும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.
2024-25 நிதியாண்டில் மட்டும் ரெயில் பயணிகளுக்கான உணவின் தரம் தொடர்பாக மொத்தம் 6,645 புகார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் அதில் 1,341 வழக்குகளில் சேவை வழங்குநர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், 2,995 வழக்குகளில் எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன.
சமீபத்தில், பாட்னா-டாடா வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் உணவில் பூச்சிகள் காணப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் ஐ.ஆர்.சி.டி.சிக்கு ரூ.10 லட்சமும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.50 லட்சமும் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.
உணவு தொடர்பாக எழும் இதுபோன்ற புகார்களை தொடர்ந்து உணவின் தரம், தூய்மை மற்றும் பயணிகள் சேவைகளை கடுமையாகக் கண்காணிக்குமாறு அனைத்து மண்டல ரெயில்வேகளுக்கும் ரயில்வே வாரியம் அறிவுறுத்தி உள்ளது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் காணொளிக் கலந்துரையாடல் மூலமாக குறைகளை உடனடியாக நீக்கி பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்கமுடியும் என்று இந்திய ரெயில்வே கூறுகிறது.