அமெரிக்காவில் இருக்கும் இந்திய பெண்கள் பிப்ரவரி மாதத்திற்குள் வயிற்றில் இருக்கும் குழந்தைகளை பெற்றெடுத்துவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு பின்னால் உள்ள காரணத்தைப் பார்ப்போம்.
அமெரிக்காவில் சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. கமலா ஹாரீஸுக்கும் ட்ரம்புக்கும் இடையே பெரிய போட்டி இருந்தது. இதில் டொனால்ட் டரம்ப் வெற்றிபெற்றார். இதனையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் அதிபராக பொறுப்பேற்றார். பதவியேற்றவுடனே பல அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.
இதில் ஒன்று, பிறப்புரிமை அடிப்படையில் குடியுரிமை வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனால், அங்கு வாழும் 10 லட்ச இந்தியர்கள் பேரதிர்ச்சி ஆனார்கள்.
அதாவது பெற்றோரின் குடியுரிமை அல்லது குடியேற்ற நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும், அந்நாட்டு மண்ணில் பிறந்த குழந்தைக்குத் தாமாக குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான சட்டம் கடந்த 1868ம் ஆண்டிலிருந்து அமலில் இருந்து வருகிறது. இத்தனை ஆண்டு சட்டத்தை ட்ரம்ப் மாற்றி எழுதியிருக்கிறார்.
அவர் கையெழுத்திட்ட உத்தரவில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தை குடியுரிமை பெற, குறைந்தபட்சம் ஒரு பெற்றோராவது அமெரிக்க குடிமகனாக, சட்டப்பூர்வ நிரந்தர குடியிருப்பாளராக (கிரீன் கார்டு வைத்திருப்பவர்) அல்லது அமெரிக்க ராணுவத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
10 லட்சம் இந்தியர்கள் இப்போது க்ரீன் கார்டு வாங்கும் நிலை வந்துள்ளது.
இந்தச் சட்டம் அடுத்த 30 நாட்களில் அமலில் வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால், அமெரிக்காவில் கர்ப்பமாக இருக்கும் இந்திய பெண்கள், இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னதாகவே குழந்தையை ஆப்ரேஷன் மூலம் எடுத்துவிட வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர். அதாவது பிப்ரவரி 19ம் தேதிக்கு முன்னர் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளனர் இந்தியர்கள்.
ட்ரம்பின் இந்த உத்தரவிற்கு இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புகளை எழுப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.