நாளை முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷ்யா செல்லலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வெளி நாடுகளில் இந்தியர்கள் சுற்றுலா செல்வது அதிகமாகி வருகிறது. அதேபோல் இந்தியாவிலும் வெளி நாட்டு சுற்றுலாவாசிகளின் வருகை அதிகரித்துள்ளது. அதனாலேயே பல நாடுகள் விசா இல்லாமல் பாஸ்போர்ட் மட்டும் பயன்படுத்தி இந்தியர்கள் வரலாம் என்று அனுமதியளித்தது.
அந்தவகையில், ஆகஸ்ட் 2023ம் ஆண்டு முதல் இந்தியர்களை இ-விசாக்கள் மூலம் ரஷ்யா அனுமதித்து வருகிறது. இந்த விசா முறை 4 நாட்களுக்குள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா உட்பட 5 நாடுகளுக்கு இ-விசா மூலம் பயணம் செய்ய ரஷ்யா அனுமதி வழங்கியுள்ளது.
தற்போது சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை விசா இல்லாமல் ரஷ்யா உள்ளே அனுமத்தித்து வருகிறது. இதன் வெற்றியை தொடர்ந்து இந்தியாவுக்கு இந்த திட்டத்தை விரிவுப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
அறிக்கைகளின்படி, 2024-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே சுமார் 28,500 இந்திய சுற்றுலாப் பயணிகள் ரஷ்ய தலைநகரான மாஸ்கோவிற்கு சென்றுள்ளனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது இது1.5 மடங்கு அதிகமாகும். இந்த வளர்ச்சியானது ரஷ்ய சுற்றுலாவில் இந்திய சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வம் அதிகரித்திருப்பதை வெளிப்படுத்துகிறது.
இதனால், விசா இல்லாமல் இந்தியர்கள் ரஷ்யா வரலாம் என்ற இந்த திட்டத்தால் மேலும் ரஷ்யாவின் சுற்றுலா துறை வளர்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான ஏற்பாடுகள் இரண்டு மாதங்கள் முன்னரே ஆரம்பமாகின. அப்போது இதுகுறித்து மாஸ்கோ சுற்றுலா குழுவின் தலைவர் பேசினார். அதாவது, இந்தியப் பயணிகள் விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு செல்ல அனுமதிக்கும் புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி அமலுக்கு வந்தால், இந்தியாவில் இருந்து மாஸ்கோ வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும் என்றார்.
ஏற்கனவே இந்தியர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம் என்றிருந்த நிலையில், தற்போது ரஷ்யாவும் இதில் இணைந்திருக்கிறது.