இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த நெரிசலைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், நம் நாட்டில், அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயில் சேவை, 2027ல் துவங்கும் என்ற அறிவிப்பை மத்திய அமைச்சர் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் இருந்து, குஜராத்தின் ஆமதாபாத் வரை, நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவை துவங்க திட்டமிடப்பட்டதை அடுத்து, அதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.இதற்கான திட்டத்தை கடந்த 2015ஆம் ஆண்டு அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.மணிக்கு 320 கி.மீ., வேகத்தில் செல்லக் கூடிய இந்த அதிவேக ரயில் சேவை ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 1.08 லட்சம் கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் தயாராகி வருகிறது.
இந்த அதிவேக ரயில், மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் இருந்து புறப்பட்டு, குஜராத்தின் வாபி, சூரத், ஆனந்த், வதோதரா, ஆமதாபாத் நகரங்களை இணைக்க உள்ளது. இவ்விரு நகரங்களுக்கு இடையே 508 கி.மீ தூரம் உள்ளது. மொத்தம் 12 ரயில் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதுவரை 321 கி.மீ., துாரத்துக்கான பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ள நிலையில், ரயில் செல்வதற்கான சுரங்கம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
மும்பை - ஆமதாபாத் இடையிலான பயண துாரம் 9மணி நேரமாக இருக்கும் நிலையில், புல்லட் ரயில் சேவை அதை 2 மணி நேரம் 7 நிமிடங்களாக குறைக்கும். காலை மற்றும் மாலை நேரங்களில் ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒரு ரயில் புறப்படும் வகையில் சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், 2027 ஆகஸ்ட் மாதம் முதல் நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் என அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.ஆக. 2027ம் ஆண்டு புல்லட் ரயில் சேவையை தொடங்க வேண்டும். மக்கள் சேவைக்கு அதை அளிக்க வேண்டும் என்பது எங்களின் இலக்காக இருக்கிறது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.