சமீபகாலமாக, நிதி சார்ந்த பல்வேறு மோசடிகள் போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி அதிளவில் அரங்கேறி வருவதாக தெரியவந்துள்ளது. இதுபோன்ற குற்றச்செயல்களில் தனி நபர்களின் மொபைல் போன் நம்பர்களை அவர்களுக்கே தெரியாமல் பயன்படுத்தி மோசடி நபர்கள் அதிகளவு சைபர் குற்றங்களில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
பல்வேறு அரசு நலத்திட்டங்கள் மற்றும் முக்கியமான தேவைகளுக்கு நமது ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது. அந்த வகையில் அரசின் சேவையை பெறுவதற்கு ஆதார் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை நகல் எடுத்து பலரிடம் தருகிறோம். அவ்வாறு தரப்படும் ஆவணங்களை வைத்து நமக்கே தெரியாமல் நமது பெயரில் சிம் கார்டு வாங்கி மோசடி செயல்களில் ஈடுபட முடியும்.
அதுமட்டுமில்லாமல் நமது ஆதார் கார்டை பயன்படுத்தி பிறருக்கு சிம் கார்டுகளை வாங்கி தரமுடியும். அப்படி நமது பேரில் வாங்கித்தரப்படும் சிம் கார்டை பயன்படுத்தி ஏதாவது மோசடி நடந்தால் அதற்கு நாமே பொறுப்பு.
அதாவது நம்பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டை பயன்படுத்தி மோசடி நபர்கள் ஆன்லைன் மோசடி, பைசர் மோசடி போன்ற சட்ட விரோத குற்றச்செயல்களில் ஈடுபட்டால் அதற்கு சிம் கார்டு வாங்கிக்கொடுத்த நாமே முழுபொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும், அந்த எண்ணுக்குரிய வாடிக்கையாளர்தான் குற்றவாளியாக கருதப்படுவர் என்றும் ஒன்றிய தொலைதொடர்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, பொதுமக்கள் உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் சிம்கார்டு அளிப்பதை தவிர்க்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. உங்களது செல்போன் தொலைந்து போனால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றும் சிம்கார்டை செயலிழக்க செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
அதேபோல் மாற்றப்பட்ட IMEI எண்களைக் கொண்ட மொபைல் போன்களை பயன்படுத்தவும், வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, IMEI எண் சிதைக்கப்பட்ட செல்போன்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
தவறான வழிகளில் சிம் கார்டுகளை வாங்குவது அல்லது சைபர் குற்றங்களை செய்வதற்காக உங்களது சிம் கார்டுகளை மற்றவர்களுக்கு மாற்றுவது போன்ற செயல்கள் கடுமையான சட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும்.
தங்கள் பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டை யாராவது தவறான செயல்களுக்கு பயன்படுத்தப்படும் போது, அசல் பயனர் குற்றவாளியாகக் கருதப்படலாம் என ஒன்றிய தொலைதொடர்பு துறை தெளிவுபடுத்தி உள்ளது.
அந்த வகையில், IMEI எண்களை சிதைப்பது உள்ளிட்ட சட்டத்தை மீறும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ.50 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தும் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
உதிரிபாகங்கள் இணைக்கப்பட்ட மோடம் உள்ளிட்ட சாதனங்களை வாங்க வேண்டாம் என்றும் போலி ஆவணங்கள், மோசடி, ஆள் மாறாட்டம் ஆகியவை மூலமாக சிம்கார்டு வாங்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
இதேபோல் சமீபகாலமாக அதிகளவில் மொபைல் போன் செயலி மற்றும் இணையதளம் வழியாகவும் சைபர் மோசடிகளை அரங்கேற்றுகின்றனர். எனவே, அடையாளம் தெரியாத எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் மீது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
எனவே பொதுமக்கள் ‘சஞ்சார் சாத்தி’ என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் மொபைல் போன்களின் IMEI மற்றும் மொபைல் எண் மூலம் உங்களுடைய பெயரில் எத்தனை சிம்கார்டுகள் வாங்கப்பட்டுள்ளன என்கிற தகவல்களை அறிந்து கொள்ள முடியும். அதேசமயம் முறைகேடாக வாங்கப்பட்ட சிம்கார்டு குறித்தும் அதே இணையதளத்தில் புகாரும் அளிக்கலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.