
நாட்டில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், மத்திய அரசு அதனைத் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது. சைபர் குற்றங்கள் அதிகரிக்க துருப்புச் சீட்டாக இருப்பவை சிம் கார்டுகள் தான். தொழில்நுட்ப வளர்ச்சியால் பல போலி சிம் கார்டுகளின் மூலம் சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன.
ஆன்லைனில் பணத்தை இழந்த பொதுமக்களில் சிலர் மட்டும் தான் புகார் கொடுக்கின்றனர். புகார் அளிக்கப்படாத சைபர் குற்றங்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் மொத்த குற்றங்களின் எண்ணிக்கை உயரும். ஆகையால் பொதுமக்கள் பயப்படாமல் புகார் கொடுக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் சைபர் குற்றப் பயன்பாட்டில் ஈடுபடுத்தப்பட்ட பல இலட்சம் சிம் கார்டுகளையும் மத்திய அரசு முடக்கியுள்ளது.
சைபர் குற்றம் தொடர்பான சிம் கார்டுகள் குறித்த கேள்வி ஒன்று ராஜ்யசபாவில் கேட்கப்பட்டது. இதற்கு உள்துறை இணையமைச்சர் சஞ்சய் பண்டி பதிலளித்தார். அவர் கூறுகையில், “சைபர் குற்றங்களைக் குறைக்க மத்திய அரசின் நடவடிக்கைகள் தற்பேது மேலும் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு படியாக சைபர் குற்றங்களில் சம்பந்தப்பட்ட 9.42 இலட்சம் சிம் கார்டுகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன. இதுதவிர 2,63,348 ஐஎம்இஐ (IMEI) எண்களையும் மத்திய அரசு தடை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் இந்த துரித நடவடிக்கையால் போலி சிம் கார்டுகள் பலவும் செயலிழந்து உள்ளதால், சைபர் குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிம் கார்டுகளை வாங்கும் போது அதிக கட்டுப்பாடுகளை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நடக்கும் அனைத்து விதமான சைபர் குற்றம் மற்றும் டிஜிட்டல் கைது போன்றவற்றை ஒருங்கிணைந்து தடுக்க ‘சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C)’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் ஒரு பகுதியாக தேசிய சைபர் குற்றம் போர்ட்டல் (https://cybercrime.gov.in/) உருவாக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்களை அடையாளம் காணும் பொதுமக்கள் மற்றும் சைபர் குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் போர்ட்டலைப் பயன்படுத்தி புகார் அளிக்கலாம். இந்த அமைப்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான சைபர் குற்றங்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.
சைபர் குற்றங்களுக்கு எதிரான குற்றங்களை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. சமீபத்தில் சைபர் குற்றவாளிகளுக்கு மேற்கு வங்க நீதிமன்றம் நாட்டில் முதன்முறையாக ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு ஒட்டுமொத்த சைபர் குற்றங்களுக்கு எதிரான போராட்டத்தில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) மற்றும் தேசிய சைபர் குற்றம் போர்ட்டல் ஆகியவற்றின் மூலம் சைபர் குற்றங்களை உடனுக்குடன் கண்டறிந்து பொதுமக்களுக்கு நீதியை வழங்க முடியும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.