'MPox கிளேட் 1பி' வைரஸ் தாக்கிய இந்தியாவின் முதல் நபர்!

MPox Clade 1B
MPox Clade 1B
Published on

செப் 23, திங்கள் கிழமை,கேரள சுகாதாரத் துறையின் அறிவிப்பின் படி, சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து கேரளா திரும்பிய மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவருக்கு MPox கிளேட் 1பி ஸ்ட்ரெய்ன் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்நோய் தாக்கிய முதல் நபர் இவர் தான்.

சில மாதங்களுக்கு முன் Mpox வைரஸ் உலகளாவிய பரவலை தொடர்ந்து ஹரியானாவில் ஒருவருக்கு கண்டுபிடிக்கப்பட்டது. அவரை தொடர்ந்து இந்தியாவில் 30 பேர் MPox வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் 29 பேரும், கிளேட் 2பி எனப்படும் லேசான பாதிப்பு கொண்ட வைரஸ் திரிபால் பாதிக்கப்பட்டவர்கள். இவர் ஒருவர் மட்டுமே கடுமையான பாதிப்பு கொண்ட கிளேட் 1பி வைரஸ் பாதிப்பு கொண்டவர் என்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலில் Monkeypox (Mpox) அல்லது தமிழில் குரங்கம்மை என்று அழைக்கப்பட்டது. இது ஆர்த்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த குரங்குப் பாக்ஸ் வைரஸால் ஏற்படும் ஒரு நோயாகும். 1958 இல் முதன் முதலில் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சமீபகாலம் வரை, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் குரங்குகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த நபர்களிடையே இது முதன்மையாக கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ், பாதிக்கப்பட்டவர்களின் இரத்தம், தோலில் உள்ள புண்கள் அல்லது சளி ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு மூலம் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவியது. சுவாசத்தின் மூலமும் இந்த நோய் தொற்று பரவுகிறது. இதன் அறிகுறிகள் காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள் மூலம் கண்டறியலாம். இது முகத்தில் தொடங்கி உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவுகிறது.

பாதிக்கப்பட்டவரின் தொடர்பைத் தவிர்ப்பது, நல்ல சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களைப் பராமரிக்கும் போது பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துவது மூலம் மேலும் பரவாமல் தடுக்கலாம்.

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிக்கையின் படி "அனைத்து மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, விமான நிலையங்கள் உட்பட பொது இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து திரும்பி வருபவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப் படுவார்கள். தற்போது, ​​ஐந்து ஆய்வகங்களில் சோதனை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேவைப்பட்டால், கூடுதல் ஆய்வகங்களுக்கு சோதனை வசதிகள் விரிவுபடுத்தப்படும்", என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நோய் அறிகுறிகள் தென்படும் பிற நாடுகளில் இருந்து வரும் குடிமக்கள் சுகாதாரத் துறைக்கு தெரிவித்து சிகிச்சை பெறுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்:
உயிரை கொல்லும் குரங்கு அம்மை!
MPox Clade 1B

அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக யாராவது MPOX அறிகுறிகளுடன் வந்தால், சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

எம்பாக்ஸ் (MPox) - குரங்கம்மை தொற்று முதன் முதலில் காங்கோ நாட்டில் பரவியது. இதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தற்போது, இந்த நோய்த்தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் வேகமாக பரவி வருகிறது. ஆப்பிரிக்கா மட்டுமன்றி அதைத் தாண்டியும் இந்த நோய் பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரித்திருந்தார்.

இந்த நோய் பரவலை தடுக்க அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com