குரங்கு அம்மை நோய் தொற்று குறித்து சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. அந்நிலையில், தற்போது மத்திய அரசின் பொது சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.
கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நிலைமை சீராகியிருக்கிறது. இந்நிலையில், குரங்கு அம்மை தொற்று இப்போது புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் இந்த தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்ட இது, இப்போது 100க்கும் அதிகமான நாடுகளில் பரவியிருக்கிறது.
நோயின் இயல்பை பொறுத்த அளவில், மனிதர்களிடமிருந்து, மனிதர்களுக்கு எளிதில் பரவாது. ஆனால், இந்த தொற்று பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு எளிதில் பரவும். தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேரில் ஒருவர் இறந்துவிடுவார்கள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே, இது உயிர்கொல்லி நோயாகவும் பார்க்கப்படுகிறது. சமீபத்திய நிலவரப்படி 17,000க்கும் அதிகமானோர் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் 524 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆப்பிரிக்காவை கடந்த நோய் மற்ற நாடுகளுக்கும் பரவியுள்ளதால், உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசர நிலையை பிறப்பித்திருக்கிறது. ஐநா சபையின் உலக சுகாதார அமைப்பின் அவசரக்குழுக் கூட்டத்திற்குப் பிறகு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த வைரஸ் சர்வதேச எல்லைகள் மூலம் பல நாடுகளில் பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், குரங்கு அம்மை நோய் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய பொது சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, காங்கோ, மத்திய ஆப்பிரிக்க நாட்டு பயணிகளை பரிசோதிக்க வேண்டும் என்றும், நோய் தாக்கிய நாடுகளுக்கு பயணித்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு பாதிப்பு இருக்கிறதா என கண்டறிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை யாருக்கும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இல்லை என்றும், தோல் அரிப்பு, சீழ் வடிதல், 2-4 வாரம் தொடர் காய்ச்சல், தலைவலி, தசை வலி, முதுகு வலி, சோர்வு, நிணநீர் கணுக்கள் வீக்கம் போன்றவை குரங்கு அம்மையின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்திருக்கிறது. பொது மக்களில் எவருக்கேனும் மேற்காணும் அறிகுறிகள் காணப்பட்டால் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வதில் சுணக்கம் காட்டக் கூடாது.