

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரெயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பெரும்பாலான இந்திய மக்களின் வாழ்வில் ரெயில் பயணம் ஒரு அன்றாட அங்கமாகவே மாறிவிட்டது. கல்வி கற்க, வேலைக்கு செல்ல, வீட்டிற்கு செல்ல, சுற்றுலாச் செல்ல என நாள்தோறும் கோடிக்கணக்கான பயணிகள் இந்திய ரெயில்வேயில் பயணம் செய்கிறார்கள். பேருந்து கட்டணத்தை விட ரெயில் கட்டணம் குறைவு மற்றும் பாதுகாப்பான மற்றும் எளிதான பயணத்திற்காக பலரும் ரெயில் பயணத்தை விரும்புகின்றனர். சொந்த ஊருக்கு நீண்ட தூர பயணத்திற்கு பெரும்பாலான மக்கள் ரெயில் பயணத்தையே விரும்புகின்றனர்.
அந்த வகையில் இந்திய ரெயில்வே, பயணிகளின் வசதிக்கேற்ப பல்வேறு ரெயில் சேவைகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே 2019-ம் ஆண்டு முதல் தனியார் ரெயிலையும் அறிமுகப்படுத்தியிருந்தது.
தனியார் ரெயில் எனப்படும் தேஜஸ் விரைவு ரெயிலை, இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான ஐஆர்சிடிசி இயக்கி, பராமரித்து வரும் நிலையில் இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இதன் முதல் வர்த்தக ரீதியிலான பயணம் 2019-ம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி தொடங்கிய நிலையில் இது புதுடெல்லியில் இருந்து லக்னோ இடையே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயில் சேவை பயணிகள் இடையே அதிக வரவேற்பை பெற்றதுடன், அதனை இயக்கிய ஒரு மாதத்துக்குள் ரூ.7.73 லட்சம் வருவாயை ஈட்டி புதிய சாதனை படைத்திருந்தது. இது அதிவேக, நவீன வசதிகள் கொண்ட, முற்றிலும் குளிரூட்டப்பட்ட ஒரு விரைவு ரெயிலாகும். இருக்கை வசதி மட்டும் கொண்ட இந்த ரெயிலில் பயணிகளுக்கு விரிவான வசதிகள், சொகுசு அம்சங்கள், நவீன தொழில்நுட்ப பயன்பாடு, தானியங்கி கதவுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 முதல் 180 கி.மீ வரை இருக்கும்.
தேஜஸ் ரெயில் இயக்கப்படும் அதே வழிப்பாதையில் இயக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் ரெயில்களை எல்லாம் விட, தேஜஸ் ரெயிலின் கட்டணம் மிக அதிகம் என்றாலும் தேஜஸ் ரெயிலுக்கு பயணிகளின் ஆதரவு அதிகமாகவே உள்ளது என்றே சொல்லலாம்.
2025 நிலவரப்படி பார்த்தால் தேஜஸ், ராஜ்தானி, சதாப்தி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற ரெயில்கள் அதிவேக பயண சேவையை வழங்கி வருகின்றன. இவற்றுடன் ஒப்பிட்டு டிக்கெட் கட்டணம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
தேஜஸ் விரைவு ரெயிலில் ஏசி இருக்கை வசதி, எக்ஸிக்யூட்டிவ் இருக்கை வசதி என இரண்டு வசதிகளை போன்றே சதாப்தி மற்றும் வந்தே பாரத் ரெயில்களிலும் இருக்கின்றன. ஆனால் ராஜ்தானி விரைவு ரெயில் நெடுந்தொலைவு ரெயில் என்பதால் இதில் மேற்சொன்ன இரு வசதிகளுடன் கூடுதலாக குளிர்சாதன படுக்கை வசதியும் உள்ளது.
தேஜஸ் ரெயிலில் டெல்லியில் இருந்து லக்னோ செல்ல ஏசி இருக்கை வசதிக்கு ரூ.1679ம், எக்ஸிக்யூட்டிவ் இருக்கை வசதிக்கு ரூ.2,457ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அதேசமயம், வந்தே பாரத் மற்றும் சதாப்தி விரைவு ரெயில்களில் ஏசி இருக்கை வசதிக்கு ரூ.1,255ம், சதாப்தியில் எக்ஸிக்யூட்டிவ் வசதிக்கு ரூ.1955ம், வந்தே பாரத் ரயிலில் ரூ.2415ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேசமயம், ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏசி த்ரி டயர் ரூ.1,590ம், ஏசி செகண்ட் டயர் ரூ.2,105ம், ஏசி ஃபர்ஸ்ட் கிளாஸ் – ரூ.2,630ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தேஜஸ் ரெயிலில் டிக்கெட் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயணிகள் மத்தியில் வரவேற்பு குறையவில்லை என்று சொல்லப்படுகிறது. தற்போதைய நிலவரம் குறித்து விசாரித்தால், டிக்கெட் முன்பதிவு முதல் வருவாய் ஈட்டுவது வரை இன்னும் மவுசு குறையாமல் அப்படியே இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தியாவில் கடந்த 6 ஆண்டுகளில் மும்பை – அகமதாபாத் மற்றும் லக்னோ – புதுடெல்லி என இரண்டு தனியார் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட தனியார் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரெயில்வே திட்டமிட்டிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.