124 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் இந்தியாவில் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
உலகம் முழுவதுமே பல நாடுகளில் காலநிலை வழக்கத்திற்கு மாறாகத்தான் இருந்து வருகிறது. எப்போதும் கடுமையாக வெயில் அடிக்கும் பகுதிகளில் மழையும், மழை பெய்யும் பகுதிகளில் வெய்யிலும் என சீரற்ற காலநிலை இருந்து வருகிறது. பாலைவனத்தில்கூட மழை நீர் தேங்கியிருந்தது. இதற்கு காரணம் எல் நினோ நிகழ்வு என்று கூறப்படுகிறது.
அதேபோல்தான் இந்தியாவிலும் இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக கடுமையான குளிர் அலைகள் தோன்றும் என்று சொல்லப்பட்டது. இது வரும் பிப்ரவரி மாதம் வரை இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. அதன்படி வட மாநிலங்களில் கடுமையான குளிர் அலை இருந்து வருகிறது.
இப்படியான சமயத்தில் கடந்த ஆண்டு இந்தியாவில் எந்த அளவிற்கு வெயில் இருந்திருக்கிறது என்று அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
அந்தவகையில் இந்தியாவில் கடந்த ஆண்டு பகல் நேரங்களில் அதிகப்படியான வெப்பம் இருந்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது, “இந்தியாவில் 1901ம் ஆண்டு முதல் இதுபோன்ற வெப்பம் இல்லை. ஆனால், கடந்த ஆண்டு மீண்டும் அதிக அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. கடந்தாண்டு வெப்பநிலை, இயல்பை விட 0.54 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை, நீண்ட கால சராசரியை விட 0.90 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது.
ஐரோப்பிய காலநிலை ஏஜென்சி தகவலின்படி, கடந்த ஆண்டு பதிவில் வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது. மேலும் உலக அளவில் சராசரியாக இந்தியாவில் 41 நாட்கள் ஆபத்தான வெப்பநிலை காலத்தை அனுபவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் மிகவும் அதிகப்படியான வெப்பநிலையை தாங்கியிருக்கின்றனர். பின்னர் இந்தியாவின் பல பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டது. இது முடிந்ததும் கடுமையான குளிர் அலை. இப்படி தொடர்ந்து வெவ்வேறு காலநிலைகளை இந்திய மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். வெளிநாடுகளில் இதைவிடவும் கடுமையாக காலநிலை மாறி உயிர் பலி அதிகமாக இருந்தது. ஆனால், இந்தியாவை பொறுத்தவரை வெளிநாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவுதான் என்பது ஆறுதலாகவும், அதேசமயம் அந்த நாடுகளை எண்ணி வருத்தமாகவும்தான் இருக்கிறது.