இந்தியாவின் மிகப்பெரிய துறையான ரயில்வே துறையில் ஆறுகள், மலைகள், நகரங்கள், கோயில்களின் பெயர்களில் பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான பயணிகள் பயணிக்கும் ரயில்களுக்கு தனிப்பட்ட பெயர்களும் உண்டு. குறிப்பாக சதாப்தி, ராஜ்தானி, வந்தே பாரத், வைகை, அனந்தபுரி, கோதாவரி மற்றும் திருமலா போன்ற பெயர்களைக் கேள்விப்பட்டிருப்போம்.
இந்தப் பெயர்கள் எல்லாம் ரயில்கள் இயக்கப்படும் பகுதிகளின் தனிச்சிறப்புகள், ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட சமயம், ரயில்கள் இயக்கப்படும் பகுதிகளின் அம்சங்கள், அங்குள்ள வழிபாட்டு இடங்கள் மற்றும் நதிகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு வைக்கப்பட்ட பெயர்கள்தான்.
கோதாவரி எக்ஸ்பிரஸ்: பிப்ரவரி 1, 1974 அன்று தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த ரயில் ஆரம்ப காலத்தில் மேற்கு கோதாவரி மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள 9 ரயில் நிலையங்களில் சேவை வழங்கப்பட்டதால் கோதாவரி நதியின் பெயரால் கோதாவரி என்று பெயரிடப்பட்டது.
கரிப் ரத்: ஏழை மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் குளிரூட்டப்பட்ட பயணத்தை வழங்கும் நோக்கத்தில் 2005ம் ஆண்டு ரயில்வே துறையால் ஏழைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ரயில் என்பதால் கரிப் ரத் (கரீப் என்றால் தமிழில் ஏழை என்று பொருள்) என்று பெயர் சூட்டப்பட்டதாக முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்திருந்தார்.
துரந்தோ எக்ஸ்பிரஸ்: பெங்காலி மொழியில் துரந்தோ என்றால் 'எந்தப் பிரச்னையும் இன்றி சீராகப் போகிறது' என்று பொருள். இந்த ரயில் குறைந்த ஸ்டேஷன்களில் நின்று, நீண்ட தூரம் பயணிக்கிறது. அதனால் இந்த ரயிலுக்கு ‘துரந்தோ’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஷதாப்தி எக்ஸ்பிரஸ்: இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நூற்றாண்டு விழாவில் 1989ல் தொடங்கப்பட்டது. அதனால் இதற்கு ஷதாப்தி என்று பெயர். (ஷதாப்தி என்ற சொல்லுக்கு தமிழில் நூற்றாண்டு என்று பொருள்.)
திருமலா எக்ஸ்பிரஸ்: இது விசாகப்பட்டினத்திலிருந்து திருப்பதிக்கு செல்லும் ரயில். திருப்பதியில் பெருமாளை தரிசிக்கும் பக்தர்களை மனதில் வைத்து இந்த ரயில் இயக்கப்பட்டதால் இதற்கு திருமலை என்று பெயர்.
சபரி எக்ஸ்பிரஸ்: இந்த ரயில் ஹைதராபாத் மற்றும் திருவனந்தபுரம் இடையே இயக்கப்படுகிறது. இந்த ரயில் சபரிமலை செல்லும் பயணிகளுக்கு ஏற்றது. அதனால் சபரி என்று பெயர் சூட்டப்பட்டது.
திருமலை, பூரி, சபரி போன்ற தனித்துவமான பெயர்கள் குறைவு. பெரும்பாலான ரயில்களுக்கு அவை சென்று சேரும் இடங்களே பெயர்களாக மாறுகின்றன. உதாரணத்திற்கு. பெங்களூர் - சென்னை மெயில், சென்னை - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ், ஹவுரா - மும்பை மெயில் போன்றவை.
ஒரு ரயிலுக்கு குறிப்பிட்ட பெயர் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று மக்கள் கருதினால், உள்ளூர் ரயில் நிலையத்திலோ அல்லது உள்ளூர் ரயில்வே அலுவலகத்திலோ உள்ள ஆலோசனைப் பெட்டியில் தங்கள் யோசனைகளைச் சமர்ப்பிக்கலாம். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்கும் கொண்டு செல்லலாம்.
மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகள் இணைக்கப்பட்டு, ரயில்வே அமைச்சகத்துக்கு இவை அனுப்பப்படும். அங்கு அதிகாரிகள் ஆலோசித்து பெயர்களை முடிவு செய்வர். மனுக்களில் கொடுக்கப்பட்டுள்ள பெயர்களை விட சிறந்த பெயர் ஏதேனும் இருந்தால், அவர்கள் அதற்கு முன்னுரிமை வழங்குவர்.
இப்படித்தான் ரயில்களுக்கு பெயர்கள் வைக்கப்படுகின்றன. பெயர் இல்லாத ரயில்கள் என்றால் அவை சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன.