சீரடைகிறது இண்டிகோவின் விமான சேவை..! பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணம் திருப்பியளிப்பு!!

Indigo
Indigo
Published on

புதிய விமான பணி நேர கட்டுப்பாடு விதிகள் காரணமாக விமானிகள், விமானி பணிப்பெண்கள் உள்ளிட்டோர் அடங்கிய இண்டிகோ விமான பணிக்குழுவுக்கு சமீபத்தில் பற்றாக்குறை ஏற்பட்டது.இதனால் இண்டிகோ விமான நிறுவனத்தின் சேவைகள் சமீபத்தில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டன.இதனால் நாட்டின் பல்வேறு நகரங்களில் இண்டிகோ நிறுவனத்தின் ஏராளமான விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினார்கள்.

இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துக் கொண்ட விமான போக்குவரத்து அமைச்சகம் ரத்து செய்யப்பட்ட பயணச்சீட்டுகளுக்கான கட்டணங்களை பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 7 இரவு 8 மணிக்குள் திருப்பி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. பாதிக்கப்பட்ட பயணிகள் தங்கள் பயண நேரத்தை மாற்ற கூடுதல் கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது என்றும் அவர்களின் உடைமைகளை அடுத்த 48 மணி நேரத்தில் அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் இண்டிகோ நிறுவனத்திற்கு ஆணையிட்டது.

இந்நிலையில் இந்திய விமானத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள இந்த செய்திக் குறிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ரத்து செய்யப்பட்ட பயண சீட்டுகள் அல்லது மிகவும் தாமதமாக விமானங்களை இயக்கியதற்காக பயணிகளிடமிருந்த இதுவரை பெற்ற ரூபாய் 610 கோடியை இண்டிகோ நிறுவனம் திருப்பி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் 3000 பைகள், பெட்டிகள் உள்ளிட்ட பயணிகளின் உடைமைகளும் பயணிகளுக்கு திரும்பி அளிக்கப்பட்டுள்ளன.

சென்னை, தில்லி, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத், கோவா ஆகிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் இயல்பு நிலை ஏறத்தாழ திரும்ப வந்துள்ளதாகவும் அந்த நிலையங்களின் இயக்குனர்கள் உறுதி செய்துள்ளனர். பயணிகளின் பாதுகாப்பு, செளகரியம், கண்ணியம் ஆகியவற்றுக்கு மத்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது.

நாடு முழுவதும் விமான போக்குவரத்தின் முழுமையான சேவைகள் இயல்பு நிலையை நோக்கி விரைவாக முன்னேற வருகிறது என்றே சொல்லலாம்.எனினும், நிலைமை முழுமையாக சீரடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் அமைச்சகம் எடுத்து வருகிறது.

இண்டிகோ நிறுவனம் ஒரு நாளில் 1250 விமானங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் இயக்குவது வழக்கம். இந்நிலையில் 650 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று இயக்கப்பட்டதாக அந்த நிறுவனத்தின் செய்திக் குறிப்புஒன்று தெரிவிக்கின்றது. விமான சேவைகள் டிசம்பர் 15க்குள் சீராகும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
குட் நியூஸ்.! ஆண்களுக்கும் வரப்போகுது இலவச பேருந்து பயணம்..!
Indigo

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நிலை விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட மத்திய அரசு ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இண்டிகோ சேவையில் என்ன தவறு நேர்ந்தது என்பதை ஆராய்ந்து, வருங்காலத்தில் இது போன்ற குளறுபடிகள் ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க இந்த விசாரணை உதவிகரமாக இருக்கும்.

இந்நிலையில் விமான சேவைகளில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கான காரணங்களை ஆராயும் நோக்கில் இண்டிகோ நிர்வாகிகள் விமான போக்குவரத்து தலைமையிலான இயக்குனரகம் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கு போக்குவரத்து சுற்றுலா மற்றும் கலாச்சார துறைக்கான நாடாளுமன்ற நிலை குழு சம்மன் அனுப்ப வாய்ப்புகள் உள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கூறுகின்றன.

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கடைசி நேரத்தில் கண்விழ்த்து விமான பயணங்களில் சாதாரண வகுப்பு கட்டணங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் வரம்பு விதித்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த கட்டண வரம்பு தொடர வேண்டும் என்றும் மேலும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com