

பெண்களுக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் பெண்களுக்கான விடியல் பயணம் எனும் இலவச பேருந்து பயணத் திட்டம், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இத்திட்டத்தின்படி சாதாரண பேருந்துகளில் பெண்கள் இலவச பயணத்தை மேற்கொள்ளலாம். இந்நிலையில் ஆண்களுக்கும் விடியல் பயணத் திட்டம் போலவே இலவச பேருந்து பயணத் திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால், ஓரிரு மாதங்களுக்குள் தமிழக அரசு,பொதுமக்களுக்கு மேலும் சில திட்டங்களை கொண்டு வர ஆயத்தமாகி வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்நிலையில் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மட்டும் இலவச பேருந்து பயணத்தை உறுதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு, பெண்கள் சாதாரண பேருந்துகளில் இலவசமாக பயணிக்க விடியல் பயணத் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இதன்படி வெள்ளை நிற பலகை கொண்ட பேருந்துகளில் இலவச டிக்கெட்டைப் பெற்று பெண்கள் பயணித்து வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் பெண்களின் பயண செலவுகள் குறைவதோடு பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் மாணவிகளுக்கும் உதவியாக இருக்கிறது.
பெண்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற இத்திட்டத்தை ஆண்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என ஏற்கனவே கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில் தற்போது சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் 60 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை வழங்கிட மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கான சிறப்பு கட்டண சலுகைகள் மற்றும் இலவச மாதாந்திர பேருந்து அட்டை திட்டம் அமலில் இருக்கும் நிலையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பேருந்து பயணம் என்பது மூத்த குடிமக்களுக்கு உதவியாக இருக்கும்.
விடியல் பயணம் திட்டத்தின் மூலம் தினந்தோறும் சராசரியாக தமிழ்நாட்டில் 57.81 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும் ஒவவொரு மகளிரும் மாதந்தோறும் ரூ.800 முதல் ரூ.1,000 வரை சேமிக்கின்றனர் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை சீராகும் போது, அனைத்து ஆண்களுக்கும் விடியல் பயணம் வழங்க பரிசீலிக்கப்படும் என ஏற்கனவே அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “தமிழ்நாட்டில் அனைத்து ஆண்களுக்கும் சாதாரண பேருந்துகளில் இலவச பயணம் என்பது சாத்தியமாகாத ஒன்று. ஏனெனில் அனைத்து ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணத்தை வழங்கினால் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்நிலையில் தான் 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு மட்டும் இலவச பேருந்து பயணத் திட்டத்தை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. வெகு விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது” என அதிகாரிகள் தெரிவித்தனர்.