
மே 21, புதன்கிழமை மாலை தலைநகர் டெல்லியிலிருந்து ஶ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம் 6E2142 நடுவானில் சிக்கி தத்தளித்தது, நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் 227 பேருடன் பயணித்த விமானம் கொந்தளிப்பில் சிக்கியது. இதனால் விமானி ஸ்ரீநகரில் உள்ள விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு அவசரநிலை குறித்துத் தகவல் தெரிவித்தார்.
புதன்கிழமை மாலை டெல்லி-என்.சி.ஆரில் திடீரென பெய்த ஆலங்கட்டியுடன் கூடிய பலத்த மழையால் வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்படி, ஹரியானா மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஒரு சூறாவளி சுழற்சியானது தற்போதைய வானிலை பாதித்துள்ளது.
இண்டிகோ விமானம் ஶ்ரீ நகரை நெருங்கும் போது ஆலங்கட்டி மழையில் சிக்கிக் கொண்டு தத்தளிக்க ஆரம்பித்தது.
விமானத்தில் ஏற்பட்ட மாறுதலை கண்டு பயணிகள் அனைவரும் பீதி அடைந்தனர். விமானம் புயலில் சிக்கி பறக்க தடுமாறிக் கொண்டிருந்தது. உள்ளே பயணிகள் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு, அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தனர். விமான கேபின்கள் குலுங்குவதை கண்ட பயணிகள் பீதியில் அலறினர். சிலர் கடவுளை வேண்டி பிரார்த்தனை செய்தனர். சிலரோ பயத்தில் அழுது கொண்டிருந்தனர். அனைவரின் முகத்திலும் ஏதோ ஒரு பயம் குடி கொண்டிருந்தது. இந்த நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட விமானி உடனடியாக ஶ்ரீநகர் விமான நிலைய கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு அவசர நிலையைப் பற்றி தெரிவித்தார்.
விமானத்தின் மூக்கு பகுதி ஆலங்கட்டி மழையில் பெரும் சேதம் அடைந்திருந்தது. ஆனாலும் திறமையான விமானி விபத்தை கவனத்தில் கொண்டு மாலை 6.30 மணியளவில் விமானத்தை பாதுகாப்பாக, ஶ்ரீ நகர் விமான நிலையத்தில் தரை இறக்கினார். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறங்கினர். தரை இறங்கிய பலரும் விமானத்தின் மூக்கு பகுதி உடைந்ததைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தனர். மிகவும் உயிருக்கு ஆபத்தான சூழலில் இருந்து தாங்கள் தப்பி வந்ததை நினைத்து ஆசுவாசப் பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது. தங்களது விமானம் ஸ்ரீ நகர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாகவும் அனைத்து பயணிகளும், விமான ஊழியர்களும் நலமுடன் வெளியேறி உள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் ஶ்ரீ நகர் செல்லும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குழுவும் இருந்துள்ளது. விமானத்தில் பயணிகள் நிலைமை பற்றி திரினமூல் காங் நிர்வாகி சாகரிகா கோஷ் கூறுகையில் "இது ஒரு மரணத்தை நெருங்கிய அனுபவம். என் வாழ்க்கை இதனுடன் முடியப் போவதாக உணர்ந்தேன். பயணிகள் மிகவும் பயந்து இருந்தனர். அவர்கள் பயத்த்தில் அலறி, பிரார்த்தனை செய்தனர். நாங்கள் தரையிறங்கியபோது விமானத்தின் முன்பகுதி வெடித்துச் சிதறியிருப்பதைக் கண்டோம். இந்த சூழலில் இருந்து எங்களை காப்பாற்றி வெளியே அழைத்துச் சென்ற விமானிக்கு நன்றி கூறுவதாகவும்" தெரிவித்தார்.