

இந்தியாவில் கணவன் இறந்த பிறகு, பெண்கள் பல்வேறு நிதி சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல், தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய மற்றவர்களை சார்ந்திருக்க வேண்டிய சூழலுக்கும் தள்ளப்படுகின்றனர். அந்த வகையில், விதவைகளுக்கு, தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை அளித்து அவர்களுக்கு சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு கொண்டு வந்தது தான், இந்திரா காந்தி நேஷனல் விதவை ஓய்வூதியத் திட்டம்.
இத்திட்டம் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 40-79 வயதுக்குட்பட்ட விதவைகளுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கும் மத்திய அரசின் திட்டமாகும். இத்திட்டம் தமிழ்நாட்டில் வறுமையில் வாழும் விதவைகளுக்கு முக்கிய ஆதரவாக இருக்கிறது. இது விதவைகளுக்கு நிதி உதவியை அளிப்பதன் மூலம் அவர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.
அனைத்து மாநிலத்திலும் நடைமுறையில் இருக்கும் இந்த திட்டம், தமிழ்நாட்டில் சமூக நலன் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வருகிறது.
இத்திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், விதவை ஓய்வூதியம் பெறும் பயனாளி 80 வயதை அடைந்த பிறகு, விதவை ஓய்வூதிய தொகையோடு சேர்த்து முதியோர் ஓய்வூதியமாக மாதம் ரூ.500 வழங்கப்படும். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பண்டிகையின் போது விதவைகளுக்கு இலவச சேலையும், அங்கன்வாடி மையங்களில் இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான தகுதிகள், தேவையான ஆவணங்கள், எப்படி விண்ணப்பிப்பது? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க தகுதியானவர்கள் :
* விண்ணப்பதாரர் விதவையாகவோ/விவாகரத்து பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
* விண்ணப்பதாரர் மறுமணம் செய்து கொண்டவராக இருக்கக்கூடாது.
* விண்ணப்பதாரர் ஆதரவற்றவராக இருக்க வேண்டும்.
* வேறு ஏதேனும் சமூக நல ஓய்வூதியங்களைப் பெற்றிருந்தால், பெறுபவராக இருந்தால் விண்ணப்பிக்க முடியாது.
* பிச்சை எடுக்கும் எவரும் தகுதி பெறமாட்டார்.
* குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் வேண்டும்.
* குறிப்பாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
* வயது 40 முதல் 79 ஆக இருக்க வேண்டும்.
* வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
* மத்திய மற்றும் மாநில அரசால் வழங்கப்படும் வேறு எந்த திட்டத்திலும் பயன் பெற கூடாது.
தேவையான ஆவணங்கள் :
விதவை சான்றிதழ்
ஆதார் அட்டை
வாக்காளர் அடையாள அட்டை அல்லது பான் கார்டு
BPL அட்டை
வங்கி கணக்கு முதல் பக்கம்
முகவரி சான்று
- இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள இ சேவை மையத்தை அணுகலாம்.
விண்ணப்பதாரரிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் பல கட்ட ஆய்வுகள் நடத்தப்பட்ட பிறகு ஒரு மாதத்திற்குள் நேரடியாக விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்படும்.