
இந்தோனேசியாவில் 1,700-க்கும் மேற்பட்ட தீவுகள் அமைந்துள்ளன. எனவே அருகில் உள்ள பகுதிகளுக்குச் செல்ல அங்கு கடல்வழி போக்குவரத்தே பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது.
அந்தவகையில் கிழக்கு ஜாவா மாகாணம் கெட்டபாங் துறைமுகத்தில் இருந்து கப்பல் ஒன்று புறப்பட்டது. அதில் 60-க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். மேலும் அந்த கப்பலில் 14 லாரிகள் உள்பட 22 வாகனங்களும் கொண்டு செல்லப்பட்டன.
பாலி தீவு அருகே சென்றபோது ராட்சத அலை வீசியது. இதில் நிலைகுலைந்த கப்பல் கடலில் கவிழ்ந்தது. இதனால் கப்பலில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தனர்.
தகவலின்பேரில் அங்கு விரைந்த கடலோர போலீசார் மீட்பு பணியை துரிதப்படுத்தினர். ஹெலிகாப்டர்கள் மூலமும் மீட்பு பணி நடைபெற்றது. இதன்மூலம் கடலில் விழுந்த 30 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அதே சமயம் இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 38 பேர் மாயமான நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதேபோல் கப்பலில் கொண்டு செல்லப்பட்ட வாகனங்களும் கடலில் மூழ்கின.
‘வலுவான காற்று மற்றும் 2.5 மீட்டர் (8 அடி) உயர அலைகள் காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்படுவதாக மீட்பு படையினர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து கடலோர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், "மோசமான வானிலை" மற்றும் அதிக பாரம் ஏற்றியதால் கப்பல் கடலில் கவிழ்ந்தது தெரிய வந்துள்ளது.
இந்தோனேசியாவில் சுமார் 17,000 தீவுகளைக் கொண்ட தென்கிழக்கு ஆசிய தீவுக்கூட்டத்தில் கடல் விபத்துக்கள் ஒரு வழக்கமான நிகழ்வாகவே இருந்து வருகிறது. பாதுகாப்பு தரநிலைகள் குறைவாக இருப்பதாலும், சில சமயங்களில் மோசமான வானிலை காரணமாகவும் விபத்துகள் நடப்பதாக கூறப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்தில், பாலி தீவுக்கு அருகே 16 பேரை ஏற்றிச் சென்ற படகு ஒன்று நீரில் கவிழ்ந்ததில், ஆஸ்திரேலிய பெண் ஒருவர் பலியானார், ஒருவர் காயமடைந்தார்.