

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மங்கிலால் என்ற மாற்றுத்திறனாளி( உடல் ஊனமுற்ற நபர்) பிச்சை எடுத்து கோடீஸ்வரரான சம்பவத்தை அறிந்து அரசு அதிகாரிகளுக்கு தலையே சுற்றியுள்ளது. அதுமட்டுமின்றி இவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடுமுழுவதும் வைராகி பிரபலமாகியிருக்கிறார்.
சமீபத்தில் மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்திய பிச்சைக்காரர்கள் ஒழிப்பு நடவடிக்கையால் இவரது பின்னணி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.
மத்தியபிரதேசத்தில் இந்தூரில் யாசகம் பெற்று வருபவர் மங்கிலால். மாற்றுத்திறனாளியான இவர் இரு கால்களும் நடக்க முடியாமல் பலகை வண்டி ஒன்றில் அமர்ந்து சர்பாசா பஜார் பகுதியில், பிச்சை எடுத்து வந்துள்ளார்.
மங்கிலால் பிச்சை எடுத்து மூன்று கான்கிரீட் வீடுகள்(ஒரு கட்டிடம் மூன்று மாடி கட்டிடம்), மூன்று ஆட்டோக்கள், மாருதி சுசுகி கார் வைத்துள்ளார். இவரது சொத்து மதிப்பு மட்டும் கோடிகளை தாண்டும் என்று சொல்கிறார்கள்.
மத்திய பிரதேசத்தில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிச்சை எடுப்பவர்களை கண்டறிய மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையின் மூலமாக இவரது சொத்து மதிப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஒரு நாளைக்கு பிச்சை எடுத்து ரூ.500 முதல் ரூ.1000 வரை சம்பாதிக்கும் மங்கிலால், தன்னிடம் உள்ள வீடுகளையும், கார், ஆட்டோக்களையும் வாடகை விட்டு பணம் சம்பாதிப்பது மட்டுமில்லாமல், வட்டிக்கும் பணம் கொடுத்தும் சம்பாதிக்கிறார்.
பிச்சை எடுக்கும் தொகையை அங்குள்ள கடைகளுக்கு தின வட்டி அல்லது வார வட்டிக்கு கடன் கொடுத்து, தினமும் மாலை வேளையில் வட்டியை வசூல் செய்து வந்துள்ளார். இதன் மூலமும் தினமும் அவருக்கு ரூ.1000 முதல் ரூ.2000 வரை கிடைத்துள்ளது. இவர் கடனாக மட்டும் 4 முதல் 5 லட்சம் வரை கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி உடல் ஊனமுற்றவர் என்பதால் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு இலவச வீட்டையும் பெற்றுள்ள அவர், தொடர்ச்சியாக பிச்சை எடுப்பதையும் விடாமல் செய்துவருகிறார்.
தற்போது மங்கிலால் உஜ்ஜைனில் உள்ள சேவதம் ஆஷ்ரமத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பிச்சையாக கிடைக்கும் தொகையை உள்ளூர் வியாபாரிகளுக்கு வட்டிக்கு கொடுத்ததை ஒப்புக்கொண்ட மங்கிலாலின் வங்கி கணக்கு, சொத்து மதிப்பு மற்றும் அவரிடம் பணம் பெற்றவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரி தினேஷ் மிஸ்ரா கூறினார்.