

இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதத்தின் முதல் தேதியில் மாற்றி அமைத்து வருவது வழக்கம். மே மாதத்தின் முதல் நாளான இன்று நாடு முழுவதும் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளன.
அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 993 உயர்த்தப்பட்டு ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் கிட்டத்தட்ட 1000 ரூபாய் கேஸ் விலை உயர்ந்தது வணிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வு நுகர்வோருக்கு நேரடி பாதிப்பை ஏற்படுத்த உள்ளது.
இந்நிலையில், கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மோடி விலை உயர்வின் நாயகன் என்று காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் வெளியிட்ட எக்ஸ் பதிவில், விலை உயர்வின் நாயகன் மீண்டும் சாட்டையால் அடித்துள்ளார். இன்று வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் சிலிண்டர் விலையை மேலும் ரூ. 993 உயர்ந்துள்ளார்.
மோடி கடந்த 4 மாதங்களில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை உயர்த்தியதன் விவரம்:-
ஜனவரி 1 - ரூ.111
பிப்ரவரி 1 - ரூ.50
மார்ச் 1 - ரூ.31
மார்ச் 7 - ரூ.115
ஏப்ரல் 1 - ரூ.218
மே 1 - ரூ.993
மொத்தம் ரூ. 1, 518
இந்த ஆண்டில் இன்னும் 8 மாதங்கள் உள்ளன.
இவ்வாறு பதிவிட்டுள்ளது.