

இந்தியாவில் MBBS, BDS மற்றும் பிற மருத்துவ படிப்புகளுக்கான ஒரே தேசிய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடைபெறும் மையங்களில் செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு முன்னெடுக்கப்பட்டு கடும் எச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்ற இருப்பதாக தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது.
சுமார் 22.79 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்களுக்காக, நீட்-யுஜி தேர்வு மே 3, 2026 அன்று பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இந்தியா முழுவதும் உள்ள மையங்களிலும் நடத்தப்பட உள்ளது. .
இந்தியாவின் மிகக் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றான இதில் ஏற்படும் அனைத்து குறைபாடுகளையும் நீக்க பயோமெட்ரிக் சரிபார்ப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு மேற்பார்வை போன்ற முறைகளையும், ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் வினாத்தாள்களையும் பயன்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வின் போது விண்ணப்பதாரர்களை உறுதிப்படுத்தவும் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கவும் NTA கைரேகை ஸ்கேனிங் மற்றும் முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தும். ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் பயோமெட்ரிக் விவரங்களை முன்கூட்டியே புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் மீதான பாதுகாப்புச் சோதனைகள் நுழைவு வாயிலுடன் மட்டும் நின்றுவிடாது. தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர்கள், டிஜிட்டல் ஸ்கேனிங் மற்றும் நேரடி சோதனைகள் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். மேலும் இடைவேளையின் பிறகும் மீண்டும் இந்தச் சோதனைகள் மீண்டும் நடத்தப்படலாம்.
ஆடைகளில் மறைக்கும் மோசடி தடுக்க உடை விதிமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. அரைக்கை கொண்ட மெல்லிய ஆடைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் . பெரிய பட்டன்கள், அல்லது பல பாக்கெட்டுகள் கொண்ட ஜீன்ஸ் தவிர்க்கப்பட வேண்டும். காலணிகள் தவிர்த்து வெறும் செருப்புகள் , கைக்கடிகாரங்கள், நகைகள் மற்றும் பிற அணிகலன்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மத உடைகளை அணிந்து வரும் தேர்வர்கள் கூடுதல் சோதனைகளுக்காக முன்கூட்டியே வர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமான CCTV கேமராக்களுக்குப் பதிலாக, AI இயக்கும் கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இவை தேர்வு அறையில் நடக்கும் சந்தேகத்திற்கிடமான அசைவுகள், மாணவர்களின் தேவையற்ற பேச்சு மற்றும் பிற முறைகேடுகளை உடனுக்குடன் கண்டறிந்து கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரிக்கை அனுப்பும்.
மின்னணுத் தொடர்பு மூலம் நடைபெறும் மோசடியைக் கட்டுப்படுத்த, மையங்களில் உயர் அதிர்வெண் ஜாமர்கள் பொருத்தப்படும். இந்த அமைப்புகள் மொபைல் நெட்வொர்க்குகள், புளூடூத் சாதனங்கள் மற்றும் 5G சிக்னல்களைக் கூடத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மேலும் தனிப்பட்ட எழுதுபொருட்கள் மற்றும் ஒளிபுகா பொருட்களைத் தடை செய்துள்ளது. எந்தவொரு பாதுகாப்பு மீறலையும் தடுப்பதற்காக, வினாத்தாள்கள் காவல்துறை பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.
கசிவுகளைத் தடுப்பதற்காக, கேள்வித்தாள்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்ப கண்காணிப்பின் கீழ் கொண்டு செல்லப்படும். டிஜிட்டல் லாக்கிங் அமைப்புகள், கேள்வித்தாள் கட்டுகள் அங்கீகரிக்கப்பட்ட மையங்களிலும், திட்டமிடப்பட்ட நேரத்திலும் மட்டுமே திறக்கப்படுவதை உறுதி செய்யும்.
இந்த நடவடிக்கைகள் இந்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வில் முறைகேடுகளை முழுமையாகத் தடுக்க உதவும் என NTA தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகிறது.