
இந்தியா - பாகிஸ்தான் சண்டைக்கு பின்னர் , இந்தியா தனது ஆயுத வலிமையை அதிகரித்துக் கொண்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆயுத சோதனைகளையும் , புதிய ஆயுதங்களை உருவாக்கவும் முயற்சிகளை செய்து வருகின்றது. இந்திய கடற்படை வலிமையை அதிகரிக்கும் வகையில் விரைவில், ஒரு அதி நவீன போர்க்கப்பலை இணைக்க உள்ளது. இந்த போர்க்கப்பல் இந்தியா மற்றும் ரஷ்ய கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது.
இதன் கட்டுமானத்தில் இந்தியாவின் கைவண்ணம் இருந்தாலும் ரஷ்ய தொழில்நுட்ப வல்லுனர்களின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டது. இதன் பெரும்பாலான பாகங்கள் ரஷ்யாவை சேர்ந்தது என்றாலும் இந்தியாவின் பங்களிப்பும் 26% வரை உள்ளது.
போர் கப்பல்களின் 33 முக்கிய உபகரணங்கள் இந்திய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த போர்க்கப்பலுக்கு தமல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தமல் என்பது இந்து புராணங்களின் படி இந்திரனின் கை வாளின் பெயர் ஆகும்.
இதற்கு முன்னர் கடற்படையில் துஷில் பிரில் சேர்க்கப்பட்ட தல்வார் மற்றும் தேக் கப்பல்களின் மேம்பட்ட பதிப்பாக இது இருக்கும். (தல்வார் என்றாலும் வாள் என்று பொருள் படும்). மேலும் இந்தக் கப்பலின் சின்னமாக இந்து புராணங்களில் வரும் ஜாம்பவான் கரடியின் உருவத்தையும், ரஷ்யர்கள் பெருமிதமாக கொள்ளும் அவர்களின் சாம்பல் நிறக் கரடியின் உருவத்தையும் சேர்த்து உருவாக்கியுள்ளனர்.
இந்த கப்பற்படை வீரர்களை பெரிய கரடிகள் என்று அழைக்கிறார்கள். பொதுவாக ரஷ்யாவில் வீரத்தை ஒப்பிட கரடியை பயன்படுத்துவார்கள். இந்தியாவில் சிங்கத்தையும், புலியையும் உதாரணமாக கூறுவார்கள். தமல் கப்பலின் குறிக்கோள் "எப்போதும் , எல்லா நேரங்களிலும் , எல்லா இடங்களிலும் வெற்றி " என்பது தான். தமல் ஒரு சக்தி வாய்ந்த மற்றும் ரகசியமான பலவகை செயல்பாடுகளைக் கொண்ட போர்க் கப்பல் ஆகும்.
இந்த கப்பலில் ஏராளமான தாக்குதல் தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் அதிநவீன கண்காணிப்பு ரேடார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கப்பல் 125 மீ. நீளமும் 3900 டன் எடையும் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 30 கடல் மைலுக்கும் அதிகமாக உள்ளது. இதில் ஹெலிகாப்டர் தாங்கும் வசதிகள் உள்ளது. இதில் தரையிலிருந்து தாக்கும் ஏவுகணைகள், கனரக டார்பிடோக்கள், நீர்மூழ்கி ஏவுகணைகள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. அனைத்திற்கும் உச்சமாக இதில் அதிபயங்கர பிரம்மோஸ் ஏவுகணை பொருத்தப்படுகிறது. அதனால், இந்தக் கப்பல் நாசகர போர் கப்பலாக இருக்கும்.
தமல் போர்க்கப்பல் இந்தியா ரஷ்யா நட்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் . இது மும்பையை மையமாகக் கொண்ட மேற்கு கடற்படையின் ஒரு அங்கமாக மாறும். வரும் ஜூலை 1-ம்தேதி இந்திய கடற்படையில் அதிகாரப் பூர்வமாக தமல் சேர்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மேற்கு கடற்படை தளபதியான வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜே சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.