
காஷ்மீர் பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. காஷ்மீரின் முக்கிய வருமான ஆதாரம் சுற்றுலாவாகும். கொரோனாவுக்கு பிறகு காஷ்மீருக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.
மக்களிடையே பயங்கரவாத தாக்குதல்கள் குறித்த பயமும் குறைந்து இருந்தது. ஆனால் கடந்த 22-ந் தேதி யாரும் எதிர்பாராத நிலையில் காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். மிருகத்தனமான இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, மக்கள் மீண்டும் காஷ்மீருக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.
பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து குல்மார்க், சோனாமார்க் மற்றும் ஏரி போன்ற முக்கிய பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தங்கள் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். பாதுகாப்பு படையினர் எந்த நேரமும் உஷார் நிலையில் உள்ளனர். காஷ்மீரில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. காஷ்மீர் செல்ல திட்டமிடும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்ட பகுதிகளை தவிர்க்க வேண்டும் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது காஷ்மீரில் 87 சுற்றுலாத்தலங்கள் உள்ளன. தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 48 சுற்றுலாத்தலங்களை காஷ்மீர் அரசு மூட உத்தரவிட்டது. மூடப்பட்ட சுற்றுலா தலங்கள் காஷ்மீரின் தொலைதூர பகுதிகளில் உள்ளன. இதில் கடந்த 10 ஆண்டுகளில் திறக்கப்பட்ட புதிய சுற்றுலா இடங்களும் அடங்கும்.
சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்ட இடங்களில் தூஷ்பத்ரி, கோகர்நாக், டக்சம், சிந்தன் டாப், அச்சபால், பங்கஸ் பள்ளத்தாக்கு, மார்கன் டாப், டோசமைதான் ஆகியவை அடங்கும். தெற்கு காஷ்மீரில் பல முகலாய தோட்டங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது சுற்றுலாவுக்கு அனுமதியுள்ள 39 இடங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசு விரைவில் நிலைமையை ஆராய்ந்து, அதன் பிறகு சுற்றுலா தலங்களை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.