சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமை பூங்கா அமைக்கும் தமிழக அரசின் திட்டத்திற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) இடைக்கால தடை விதித்துள்ளது. வேளச்சேரி பகுதியில் ஏற்படும் மழை வெள்ளப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், அந்த நிலத்தில் ஏரி அமைப்பது குறித்து ஏன் பரிசீலிக்கக் கூடாது எனத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.
கிண்டி ரேஸ் கிளப்பிற்குச் சொந்தமான 118 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு சமீபத்தில் கையகப்படுத்தியது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த வாடகை பாக்கி காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலத்தில் ஒரு பிரம்மாண்டமான பசுமை பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
சுமார் 4832 கோடி ரூபாய் மதிப்பில், வண்ணமலர் படுகைகள், மலர் சுரங்கப்பாதை, தோட்டங்கள், கண்ணாடி மாளிகை, பறவைகள் கூடம் மற்றும் வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்ட 25 வகையான வசதிகளுடன் இந்த பூங்கா உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்கான டெண்டர்களும் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படவிருந்தன.
இந்த நிலையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து ஒரு வழக்கை விசாரித்தது. வேளச்சேரி ஏரியின் வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பு மற்றும் ஏரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக இந்த வழக்கு தொடங்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, சென்னை சந்திக்கும் வெள்ளப் பாதிப்புகள் குறித்து தீர்ப்பாயம் கவலை தெரிவித்தது.
மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், வெறும் பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் எனத் தீர்ப்பாயம் கருத்துத் தெரிவித்தது. குறிப்பாக, கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தின் 118 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய ஏரியை உருவாக்க முடியும் என்றும், இதன் மூலம் வேளச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை மழை வெள்ள பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும் என்றும் தீர்ப்பாயம் குறிப்பிட்டது.
எனவே, இந்த விவகாரம் குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தலைமைச் செயலாளரின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் பசுமைப் பூங்கா அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 21 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.