
கும்மாயம் செய்யத் தேவையான பொருட்கள்:
முழு உளுந்து -1/4 கப்,
பச்சரிசி -11/2 டேபிள்ஸ்பூன்,
பாசிப்பருப்பு -11/2டேபிள் ஸ்பூன்.
வெல்லம் -1/2கப்,
பனைவெல்லம்-1/2கப்,நெய்-1/4கப்.
செய்முறை:
மேலே கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களை தனித்தனியாக வறுத்து மாவாக்கிக் கொள்ளவும். அதில் ஒரு கைப்பிடி மாவை தனியே எடுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து அதில் வெல்லம், பனைவெல்லம், இரண்டையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் கரைந்ததும் வடிகட்டி தனியே வைக்கவும்.
பிறகு ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் நெய்யில் மாவை வறுத்து வைக்கவும். அது ஆறியதும் வெல்லப்பாகை சேர்த்து மெல்லிய தீயில் வைத்து கை விடாமல் கிளறவும்.கொஞ்சம் கொஞ்சமாக நெய்யினை சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்து கையில் ஒட்டாமல் வந்ததும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து பின் இறக்கவும். ஒவ்வொரு வாரமும் ஆடிகும்மாயம் செய்து படைப்பது வழக்கம்.
கேழ்வரகு கூழ்
தேவையானவை:
கேழ்வரகு மாவு 3கப், தண்ணீர் -6கப், உப்பு,சி வெங்காயம்,
கேழ்வரகு மாவை தண்ணீரில் கரைத்து சிறிது நேரம் அப்படியே வைக்கவும். பிறகு அடுப்பை சிம் ல் வைத்து கேழ்வரகு கலந்ததை, உப்பு சேர்த்து வேகவிடவும். கிளறிக்கொண்டே கூழ் கையில் ஒட்டாத பதம் வந்ததும், பளபளப்பாக இருக்கும்.அந்த சமயத்தில் இறக்கி மூடி வைக்கவும். கூழ் ஆறியதும் அதனுடன் சி வெங்காயம் அரிந்ததை சேர்த்து கலந்து பின் பரிமாறவும்.
இந்த ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் கொடுக்கும் கூழ் போல் நாமும் வீட்டிலேயே தயாரித்து படைக்கலாம்.
தினை சர்க்கரைப் பொங்கல்:
ஒரு கப் தினையை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து நான்கரை மடங்கு தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை மூடி போட்டு, அடுப்பை சிம் ல் வைத்து குறைந்த தீயில் வேகவிடவும்.
கால் கப் பயத்தம் பருப்பை மலர வேகவிடவும். இதை அப்படியே தண்ணீரோடு, வெந்த தினையில் சேர்க்கவும். சமஅளவு வெல்லத் துருவலுடன் தகுந்த அளவு தண்ணீர் ஊற்றி இளம் கம்பி பதத்தில் பாகு காய்ச்சி வடிகட்டி சேர்க்கவும். நெய்யில் முந்திரி திராட்சையை வறுத்து ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து பின் படைத்தும் பரிமாறவும். மேலாக சிறிது நெய் விட்டு பின் பரிமாறவும்.
முப்பருப்பு வடை:
கடலைப்பருப்பு, -2கப் வெ உளுத்தம்பருப்பு -1/2கப், துவரம் பருப்பு _2டீஸ்பூன், ப மிளகாய் _3, இஞ்சி, கருவேப்பிலை, மல்லி, வெங்காயம் _2அரிந்தது, சோம்புத்தூள்-1/4டீஸ்பூன், உப்பு.
பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊறவிடவும். நன்கு ஊறியதும் மிக்ஸியில் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும் மாவுடன் அரிந்த வெங்காயம், ப. மிளகாய், மல்லி, கருவேப்பிலை, சோம்புத்தூள் சேர்த்து நன்கு கலந்து வடைகளாக காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.