மகிழ்ச்சி - மனிதராக பிறந்த அனைவருக்கும் பொதுவான ஓர் உணர்வு. ஒரு மனிதனின் மகிழ்ச்சி என்பது அவரை மட்டுமல்ல அவரைச் சுற்றி உள்ளவர்களின் மனநிலையையும் மாற்றி வாழ்க்கையை இனிமையாக்கும். ஒரு மனிதனால் எந்நேரமும் கவலையில் ஆழ்ந்து வாழ்வைக்கழிக்க இயலாது. இன்பமும் துன்பமும் கலந்த வாழ்வில் துன்பத்தை நகர்த்தி விட்டு மகிழ்ச்சியை மட்டும் மனதில் மலர விட்டால் வாழவும் எளிதாகும்.
இப்படி மனிதர்களிடையே மகிழ்ச்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 20 ஆம் தேதி சர்வதேச மகிழ்ச்சி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளை சர்வதேச மகிழ்ச்சி தினமாக 2012 ஆம் ஆண்டு ஜூலை 12ஆம் தேதி அன்று ஐ.நா பொதுச்சபை அறிவித்தது.
மனிதர்களின் வறுமையையும் உலகளவில் நடக்கக்கூடிய போர் மற்றும் மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வருவது தான் மகிழ்ச்சி என்று ஐநா சபை கருதுகிறது. இந்த தினத்தை ஒட்டி ஆய்வு நடத்தி உலகின் மகிழ்ச்சியான நாடுகள் தரவரிசை பட்டியலையும் வெளியிட்டு வருகிறது.
சரி மகிழ்வாக இருக்க நாங்கள் ரெடி? ஆனால் பிரச்னைகள் எங்களைத் துரத்துகிறதே என்பவர்களுக்கு மகிழ்வாய் வாழ இதோ சில வழிகள்:
* பிரச்னை இல்லாத மனிதரே இல்லை எனும்போது அதையே நினைத்து கவலையில் மூழ்குவதை விட அதிலிருந்து விலகி பிடித்த விசயங்களில் மகிழ்வாய் இருந்து பாருங்கள். மகிழ்வான மனநிலையில் பிரச்னையின் தீவிரம் அகன்று அதற்கான தீர்வு கிடைக்கும்.
* ஒரே மாதிரியான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு, நம் மகிழ்ச்சியைத் தொலைத்து, சோர்வு அடையும் சமயங்களில் அந்த இடத்தை விட்டு வெளிவந்து பிடித்த இடங்களுக்கு சென்று இயற்கையோடு உறவாடி மனதில் மகிழ்ச்சியை கொண்டு வாருங்கள்.
* குழந்தைகளைப் பாருங்கள். எந்தக் கவலையும் இன்றி மகிழ்வுடன் அவர்கள் உலகத்தில் விளையாடுவார்கள். நாமும் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடி குதூகலிக்கும்போது நம்மையறியாமல் நம் மனம் மகிழ்ச்சியில் ஆழ்ந்து புது உறசாகத்தை தரும்.
* பலரும் அன்றாடப் பிரச்னைகளால் மன அழுத்தம் ஏற்பட்டு அதனால் சிறு சிறு மகிழ்வைக் கூடஅனுபவிக்க இயலாமல் கூட்டுக்குள் ஒடுங்கி தனிமையை நாடுவார்கள். இதை தவிர்த்து மன அழுத்தம் ஏற்படும் போது நம்பிக்கையான நட்புகளிடம் பேசி பகிர்ந்து கொண்டால் அழுத்தம் குறைந்து சற்று மாற்றத்தை காணலாம்.
* முன்னர் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், சம்பவங்களை மனதில் இருந்து அகற்றிவிட்டு பிடித்த இசை, விளையாட்டு எழுதுவது பேசுவது போன்றவற்றில் நேரத்தை செலவழியுங்கள்.
* யாராலும் நமக்குள் மகிழ்ச்சியை விதைக்க முடியாது. நாம் மட்டுமே நம் உணர்வுகளுக்கு பொறுப்பாக முடியும்.
* சர்கஸ் கோமாளியைப் பாருங்கள் வருமானத்துக்காக தன் சொந்தக் கவலைகளை புறம் தள்ளி மற்றவர்களை சிரிக்க வைத்து மகிழ்ச்சிப்படுத்துவார். பிறரை மகிழ்விப்பது நமக்கு மகிழ்வு.
* அதேபோல், யாரோ ஒருவரால் நம் மகிழ்ச்சியைப் பறிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டாலே சிறு விஷயத்திற்கும் கவலை கொள்வது தவிர்க்கப்படும்.
* மகிழ்ச்சி என்பது முழுக்க முழுக்க நம் மனம் உடல் சார்ந்த உணர்வு. வெளியிலிருக்கும் எதுவும் நம் மகிழ்ச்சியைப் பறிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை.
* பிரச்னைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளப் பழக வேண்டும்.
* வேலை மற்றும் வீடு என்று மட்டும் முடங்கி விடாமல் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி இயற்கை நிறைந்த பகுதிகளுக்கு சென்று வந்தால் நன்மை தரும்.
சர்வதேச மகிழ்ச்சி தினமான இன்று மட்டுமல்ல என்றும் மகிழ்வுடன் இருப்போம்!