ஆவுலியா என்று அழைக்கப்படும் கடல் பசு இனங்களை பாதுகாப்பதற்காக தமிழக அரசால், தமிழக கடற்கரையொட்டிய சுமார் 448 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கடற் பசுக்களின் காப்பகமாக அமைக்கப்பட்டது. இந்த கடல்பசுகளின் காப்பக திட்டமானது, 2022 அறிவிக்கப்பட்டது. அதன்படியே, இன்று வரை இந்த காப்பகமானது சிறப்பாக இயங்கிக் கொண்டு வருகிறது.
கடல் பசுக்களின் பண்புகள் (Characteristics of sea cows)
கடல் பசுக்கள் பொதுவாக ஆழமில்லாத அலைகளற்ற பகுதிகளிலேயே அதிகம் காணப்படுகின்றன. மன்னார் வளைகுடா பகுதிகளில் அதிகமாக காணப்படுகின்றன. நான்கு மீட்டர் நீளமும், சுமார் 400 கிலோ எடை அளவிலும் காணப்படுகின்றன. கடலில் உள்ள புட்கள், தாவரங்களை மட்டுமே உண்ணுகின்றன. இவை பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவை.
கடல் பசு காப்பகத்தின் முக்கிய நோக்கம் (The main purpose of the sea cow archive)
2022 ஆம் ஆண்டு தமிழக அரசால் கடல் பசு காப்பகம் அமைக்கப்பட்டது. கடல் பசுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், அதன் வாழ்க்கை முறைகளை கண்காணிப்பதும், மேம்படுத்துவதும், வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பதும் இந்த காப்பகத்தின் முக்கிய நோக்கங்களாக கருதப்படுகிறது. அழியும் கடல் உயிரினங்களில் கடல் பசுக்களும் ஒன்றாக இருந்து வருவது வேதனையாக இருக்கிறது. தற்போது கடல் பசுக்களின் கணக்கெடுப்பானது நடைபெற்றது. அதில் தமிழக கடற்கரை ஓரத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கடல் பசுக்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடல் பசு காப்பகத்திற்கு சர்வதேச அங்கீகாரம் (International recognition for sea cow sanctuary)
தமிழகத்தில் செயல்பட்டு வருகின்ற கடல் பசு காப்பகத்தின் நடவடிக்கைகளையும், கடல் பசுக்களை பேணி பாதுகாத்தலையும் பார்த்து, ஐ.யு.சி.என்.(International Union for Conservation of Nature), எனப்படும் சர்வதேச இயற்கை பாதுகாப்பு யூனியனாது சர்வதேச அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. தெற்காசியாவை சுற்றியுள்ள நாடுகளில் கூட இந்த கடல் பசு காப்பக அமைப்பிற்கு இன்னும் சர்வதேச அங்கீகாரம் கிடைக்கவில்லை.
ஆனால், முதன்முறையாக தமிழ்நாட்டில் உள்ள கடல் பசு காப்பகத்தை அங்கீகரித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இதன் மூலம் சர்வதேச அளவில் கடல் பசு காப்பகத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதனால் கடல் பசுக்களின் விபரங்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், முன்னேற்பாடுகளும், விழிப்புணர்வுகளும் உலக அளவில் தெரியவரும்.
வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை செயலாளர், சுப்ரியா சாஹு இது குறித்து பேசியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இது நம் எல்லோருக்கும் கிடைத்த ஒரு பெருமை என்று கருதுகிறார்.
கடல் வளங்களையும், சுற்றுச்சூழலையும் பேணிக் காப்பதும், பாதுகாப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். அதேபோல் நம்மை சுற்றியுள்ள விலங்கினங்களையும் பாதுகாப்பது முக்கியமாகும். அழியும் நிலையில் உள்ள கடல் பசுக்கள் போன்ற கடல் வாழ் உயிரினங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும். தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும் கூட, அதற்கு நாம் ஒத்துழைப்பு தந்து சரியாக நடந்து கொள்ள வேண்டும். இது நம் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கிறது!