
முன்பெல்லாம் வீடுகளில் தினமும் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து இட்லி, தோசை செய்வது வழக்கம். ஆனால், இப்போது கிரைண்டர், மிக்ஸி வந்த பிறகு, ஒருமுறை மாவு அரைத்தால் போதும், ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறோம். ஆனால், இவ்வாறு நீண்ட நாட்கள் மாவை வைத்துப் பயன்படுத்துவது பல ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கும் என்று ஆயுர்வேத மருத்துவர்களும் ஊட்டச்சத்து நிபுணர்களும் எச்சரிக்கிறார்கள்.
ஏன் பழைய மாவு உடலுக்குக் கெடுதலானது?
1. பாக்டீரியாக்களின் வளர்ச்சி:
மாவு புளிக்கும்போது அதில் பாக்டீரியாக்கள் வளர்கின்றன. அரைத்த மாவை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் வைக்கும்போது, பாக்டீரியாக்கள் பெருகி நச்சுக்களை உருவாக்குகின்றன. மேலும், ஒரே பாத்திரத்தில் மாவை வைத்திருக்கும்போது இதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.
2. ஆயுர்வேதத்தின் 'அமா' நச்சுகள்:
ஆயுர்வேத மருத்துவத்தில், செரிக்கப்படாத உணவுத் துகள்கள் மற்றும் நச்சுக்களை ‘அமா’ என்று அழைப்பார்கள். புதிதாக அரைத்த மாவு தூய்மையானது. ஆனால், பழைய மாவில் இந்த நச்சுக்கள் உருவாகி, உடலுக்குக் கேடு விளைவிக்கும். எனவே, புதிய மாவைப் பயன்படுத்துவது நல்லது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
3. வீக்கம் மற்றும் இதயப் பாதிப்புகள்:
இட்லி, தோசை மாவில் வெந்தயம் சேர்ப்பது வழக்கம். மூன்று நாட்களுக்கு மேல் மாவு புளிக்கும்போது, அது உடலில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக, இதய நோய் உள்ளவர்களுக்கு இது கடுமையான விளைவுகளை உண்டாக்கும்.
4. செரிமானப் பிரச்சனைகள்:
பழைய மாவை ஜீரணிப்பது உடலுக்குக் கடினமாக இருக்கும். இதனால் வாய்வு, வயிற்று எரிச்சல் மற்றும் பிற செரிமானப் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. புதிய மாவு செரிமானத்தை எளிதாக்குகிறது.
5. ஊட்டச்சத்து இழப்பு:
அறை வெப்பநிலையில் அல்லது ஃப்ரிட்ஜில் நீண்ட நாட்களாக இருக்கும் மாவு, அதன் ஊட்டச்சத்து மதிப்பை இழக்கிறது. இதனால் உடலுக்குக் கிடைக்க வேண்டிய சத்துக்கள் குறைகின்றன.
6. புளித்த ஏப்பம் & நெஞ்செரிச்சல்:
இரண்டு, மூன்று நாட்களுக்கு மேல் உள்ள மாவை பயன்படுத்தும்போது, அது புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் போன்றவற்றை உண்டாக்கி, அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
மாவு கெட்டுப் போனதை எப்படி அறிவது
மாவு கெட்டுப் போயுள்ளதா என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க ஒரு வழி உள்ளது. உங்கள் விரலால் மாவை மெதுவாக அழுத்தவும்.
அது மென்மையாகவும், பஞ்சு போன்றும் இருந்தால் பயன்படுத்தலாம்.
கடினமாகவும், உலர்ந்தும் இருந்தால் அது பழைய மாவு, உபயோகிக்கக் கூடாது.
மாவைப் பாதுகாக்கும் வழிகள்
மாவை ஒரே பாத்திரத்தில் வைக்காமல், சிறிய அளவிலான இரண்டு அல்லது மூன்று பாத்திரங்களில் பிரித்து வைக்கவும். இது பாக்டீரியா வளர்ச்சியை ஓரளவு குறைக்கும்.
மாவை அதிக வெப்பம், வெளிச்சம், அல்லது சூரிய ஒளி படும் இடங்களில் வைக்காதீர்கள்.
தேவைப்படும்போது மட்டும் மாவை எடுத்து, அறையின் வெப்பநிலைக்கு வந்ததும் பயன்படுத்திவிட்டு, மீண்டும் உடனடியாக ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
ஆரோக்கியமான உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இந்த காலத்தில், இட்லி, தோசை மாவை மூன்று நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மாவு அரைப்பது கடினமான வேலைதான், ஆனால் நமது ஆரோக்கியம்தான் முக்கியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)