
உலகிலேயே மிகவும் ஆபத்தான விலங்குகளில் ஒன்றாக பாம்பு கருதப்படுகிறது. பாம்பு என்றாலே பயம் ஏற்படுவது இயல்பான ஒன்று. அது விஷமுள்ள பாம்பா, விஷமில்லதா பாம்பா என்று கூட பார்க்க மாட்டார்கள். பலர் சூழ்ந்திருக்கும் நிலையில் யாராவது ஒருவர் பாம்பு என்று கத்தி துள்ளிக் குதித்தால் போதும். மற்றவர்கள் பாம்பைக் கண்ணால் பார்க்காமலேயே கத்திக் கொண்டும் குதித்துக் கொண்டும் ஓடுவார்கள். அதனால் தான் ‘பாம்பை கண்டால் படையும் நடுங்கும்’ என்பார்கள்.
அந்தவகையில் பாம்பு நாம் வாழும் இருப்பிடங்களுக்குள் வந்துவிட்டால், அதனை பார்த்த பயத்தில் அடித்து கொல்வதை பலரும் பார்த்து இருக்கிறோம். ஆனால் சிலர் பாம்பை கொன்றால் பாவம் என கருதி அதற்காக தீயணைப்புத் துறை, வனத்துறை, பாம்பு பிடி வீரர்களை தொடர்பு கொண்டு பாதுகாப்பாக அகற்றி வனப்பகுதிகளுக்குள்ளும் விடுகின்றனர்.
இந்த நிலையில் பாம்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாம்புகள் மனிதர்கள் வாழக்கூடிய பகுதிகளுக்குள் வந்தால் எப்படி பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்த தகவல்களை அறிய வனத்துறை புதிய செயலி ஒன்றை உருவாக்கி உள்ளது.
கேரளா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் இதுபோன்ற செயலி ஏற்கனவே உள்ளது. கேரள வனத்துறை அந்த செயலிக்கு “சர்ப'' என்று பெயரிட்டிருக்கிறது. அதேபோல், தமிழ்நாடு வனத்துறை அறிமுகப்படுத்தியுள்ள இந்த செயலிக்கு ‘நாகம்' என்று பெயர் சூட்டியுள்ளது.
செயலியின் பீட்டா பதிப்பை அதிகாரப்பூர்வமாக வனத்துறை அறிமுகம் செய்து வைத்தாலும், அதில் சில தகவல்கள், விஷயங்களை சேர்த்து முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வனத்துறை திட்டமிட்டு இருக்கிறது. உதாரணமாக பாம்பு பிடி வீரர்கள் தமிழகம் முழுவதும் இருக்கும் வகையில் பிரத்தியேக பயிற்சியை வனத்துறை வழங்கி வருகிறது. மேலும் அவர்களுக்கான பாம்பு பிடி உபகரணங்களும் வழங்கப்பட உள்ளன.
உங்கள் வீட்டிலோ, நீங்கள் குடியிருக்கும் பகுதியிலோ அல்லது பொது இடங்களிலோ பாம்பை பார்த்தால் உடனடியாக நாகம் செயலி வாயிலாக புகார் தெரிவிக்கலாம். இந்த புகார் கிடைத்த உடனே பாம்பு பிடி வீரர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைவாக வந்து அதனை பிடித்து வனப்பகுதிகளில் கொண்டு சென்று விடுவார்கள்.
அதுமட்டுமின்றி பிடிபட்ட பாம்பை விடச் செல்லும்போது, ஏற்கனவே அதே பகுதியில் அந்த வகையான பாம்புகள் இதற்கு முன்பு விடப்பட்டு இருந்தாலும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும். இதனால் பாம்பு பிடி வீரர்கள் வேறு இடத்தில் கொண்டு விடுவார்கள்.
மேலும் எந்தவகையான பாம்புகள் மக்கள் வாழும் பகுதிகளில் அதிகளவில் நடமாட்டம் காணப்படும் மற்றும் எந்த வகையான பாம்புகள் வீடுகளில் பதுங்கும், பாம்பு வீட்டிற்கு புகுந்தால் முதலில் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற விவரங்களையும் இந்த செயலியின் மூலம் அறிந்து கொள்ளலாம் என வனத்துறை தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் எத்தனை வகையான பாம்பு வகைகள் இருக்கின்றன? அதுபற்றிய சுவாரஸ்ய தகவல்கள் என்ன? பாம்பு கடித்தால் செய்ய வேண்டிய முதலுதவிகள் என்ன? பாம்புகளை பிடிக்க யாரை அணுகுவது? பாம்பு பிடி பயிற்சி பெற்ற வீரர்கள் பெயர், மொபைல் எண் என்பது போன்ற பாம்பு குறித்த அனைத்து பல்வேறு விவரங்கள் நாகம் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இச்செயலி ஓரிரு நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.