
பொதுவாக, வீட்டிலோ, தோட்டத்திலோ அல்லது வெளியிலோ ஏதாவது ஒரு பாம்பை பார்த்து விட்டாலே மனிதர்கள் நடுங்கி விடுவார்கள். ஆனால், ஆயிரக்கணக்கில் விஷப் பாம்புகளை ஒன்றாகப் பார்த்தால் மனிதனின் நிலை என்னாகும்? பூமியில் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றுதான் ‘இல்ஹா டா குயிமாடா கிராண்டே‘ என்றும் அழைக்கப்படும் பாம்புத் தீவு. பிரேசில் கடற்கரையில் அமைந்துள்ள இந்த தீவு உலகின் மிகவும் விஷமுள்ள பாம்புகள் குடியிருக்கும் இடமாகும். இது பிரேசிலின் சாவோ பாலோ கடற்கரையில் இருந்து சுமார் 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. 106 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய பாறை போன்ற இடம்தான் பாம்புத் தீவு என்று அழைக்கப்படுகிறது. இங்கு 2000 முதல் 4000 வரை அதிக விஷமுள்ள பாம்புகள் வாழ்கின்றன என்று மதிப்பிட்டுள்ளனர்.
இந்தப் பாறை கடல் மட்டத்திலிருந்து செங்குத்தாக உயர்ந்து பாறைகளால் சூழப்பட்டுள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் உயர்ந்து இந்தத் தீவை பிரதான நிலப்பகுதியில் இருந்து பிரித்து தனிமைப்படுத்தி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தத் தீவு தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் இங்கு வேறு எந்த விலங்குகளோ அல்லது மனிதர்களோ வசிப்பதில்லை. பாம்புகளை வேட்டையாட யாரும் இல்லாத சூழலில் அவை செழித்து பாம்புகளின் எண்ணிக்கை பெருகிவிட்டது.
இந்தத் தீவிற்கு மனிதர்கள் செல்ல அனுமதியும் இல்லை. பிரேசிலின் சுற்றுச்சூழல் நிறுவனம் மற்றும் கடற்படை சுற்றுலாவுக்கு மக்கள் இங்கு செல்வதைத் தடுக்கிறது. ஏனென்றால், எக்கச்சக்கமான பாம்புகளின் எண்ணிக்கை மற்றும் செங்குத்தான நிலப்பரப்பு ஆகியவை அனுபவம் வாய்ந்த மலையேறும் மக்களுக்குக் கூட கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துகின்றன.
இந்தத் தீவில் உள்ள ஒரே அமைப்பு ஒரு கலங்கரை விளக்கம் மட்டுமே. இது கைமுறையாக இயக்கப்படுவதில்லை. 1920களில் தானியங்கி முறையில் இயங்கும் பிரேசிலிய கடற்படை அவ்வப்போது கலங்கரை விளக்கத்தைப் பராமரிக்க வருகை தருகிறது. இருப்பினும், இந்தப் வருகைகள் அரிதானவை.
முறையாக அரசு அனுமதி மற்றும் மருத்துவ உதவி பெற்ற அங்கீகரிக்கப்பட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கடற்படை பணியாளர்கள் மட்டுமே இங்கு பார்வையிட அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனாலும், அவர்கள் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். விஷ எதிர்ப்பு மருந்துகளுடன், மருத்துவர்களும் உடன் செல்ல வேண்டும்.
பாம்புத் தீவில் மிகவும் பிரபலமான பாம்பு, தங்க ஈட்டித் தலை விரியன் பாம்பு. இது உலகில் வேறு எங்கும் காணப்படாத அரிய இனமாகும். அதே சமயத்தில் உலகின் மிக விஷமுள்ள பாம்புகளில் ஒன்றாகும். இது தீண்டினால் சிறுநீரக செயலிழப்பு, மூளை ரத்தக் கசிவு, திசுக்கள் சேதமடைதல் போன்றவற்றால் விரைவில் மரணம் உறுதி.
இந்தப் பாம்புகளுக்கு இங்கு வரும் பறவைகள்தான் உணவு. பறவைகள் பறந்து செல்லும் முன் அவற்றை மிக விரைவில் தாக்கிக் கொல்கின்றன. இதனால் பறவைகள் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்தப் பாம்புகள் உணவுப் பற்றாக்குறை, மரபணு வீழ்ச்சி, சட்டவிரோதமாக வேட்டையாடப்படுவதாலும், வாழ்விட இழப்பின் காரணமாகவும் அழிந்து வரும் நிலையில் உள்ளது. இவை பல அரிய நோய்களைத் தீர்க்கும்.
இந்தத் தீவைப் பற்றிய சுவாரசியமான கட்டுக்கதைகளும் உண்டு. தீவில் ஏராளமான புதையலை கடற்கொள்ளையர்கள் புதைத்து வைத்திருக்கிறார்கள் என்கிற கட்டுக்கதைகளும் உண்டு. புதையல் இருக்கிறதோ இல்லையோ, ஆயிரக்கணக்கான விஷப்பாம்புகள் இருக்கின்றன என்பது மட்டும் உறுதி.