முதலீட்டாளர்களும், தொழிலதிபர்களும் புதுவைக்கு வர வேண்டும்.. முதல்வர் ரங்கசாமி வேண்டுகோள்!

முதல்வர் ரங்கசாமி
முதல்வர் ரங்கசாமி
Published on

தட்டாஞ்சாவடி வேளாண்மை வளாகத்தில் உள்ள உழவர் பயிற்சி கூடத்தில் புதுவைத் தொழிலாளர் துறை சமரச அலுவலகம் சார்பில் ‘தொழில் நல்லுறவு ‘ குறித்த ஒருநாள் பயிற்சி கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

அந்த விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியதாவது, ”தொழிற்சாலைகள் நன்றாக செல்வதற்கு நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் இடையே ஒரு நல்ல உறவு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே உற்பத்தி அதிகரித்து நாடும் வளர்ச்சி அடையும். தொழிலாளர்கள் நல்ல முறையில் வேலை செய்ய வேண்டுமென்றால், நிர்வாகம் அதற்கேற்றவாரு நடந்துக்கொள்ள வேண்டும்.  அதேபோல் தொழிற்சாலைகளை மூடிவிட்டாலும் தொழிலாளர்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

கான்ட்ராக்ட் வார்டு அட்டெண்டர் வேலைக்கு 10 மற்றும் 12ம் வகுப்பிற்கு படித்தவர்கள்தான் வேலைக்கு செல்ல வேண்டும். ஆனால் அதற்கு பொறியியல் படித்தவர்கள் வேலைக்கு செல்கிறார்கள். அதேபோல் எம்.டெக் படித்தவர்களும் 10 ஆயிரம் சம்பளத்திற்கு இந்த பணிகளுக்கு செல்கிறார்கள். படித்துவிட்டு வேலைத் தேடுபவர்கள் எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என்று கிடைத்த வேலையை செய்கிறார்கள்.

புதுவையில் சமீபக்காலமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. அதேபோல் பலர் இங்கு தொழில் ஆரம்பிக்கவே வேண்டாம் என்று முடிவு செய்கின்றனர். அதற்கு காரணம் இங்கு தொழிலாளர் பிரச்சனை உள்ளது என்று நான் நினைக்கிறேன். அப்படியான நிலை ஏற்படக்கூடாது. அதற்கு தொழில் நிர்வாகம் தொழிலாளர்களுக்கு சரியான சம்பளத்தைக் கொடுக்க வேண்டும். அதேபோல் படித்த இளைஞர்களுக்கு ஏற்ற தொழிற்சாலைகள் இங்கு வர வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அஸ்வின் செய்த செயலுக்கு அலெஸ்டர் குக் விமர்சனம்.. அப்படி என்ன செய்தார்?
முதல்வர் ரங்கசாமி

முதலீட்டாளர்களும் தொழிலதிபர்களும் புதுவைக்கு வர வேண்டும். அனைவரும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும். புதுவையில் சிறு, குறு, நடுத்தர என 1000 த்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. அந்த தொழிற்சாலைகளில் சுமார் 85 ஆயிரம் தொழிலாளிகள் வேலை செய்கின்றனர். பெரிய தொழிற்சாலைகள் இங்கு வர வேண்டும்.

அதற்கு எங்கள் அரசு ஆயத்தமாகவும் உள்ளது. இங்கு தொழிற்சாலைகள் அமைப்பதற்கு உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை என்று பலரும் கூறுகின்றனர். அதற்கான நடவடிக்கைகளை புதுவை அரசு விரைவில் எடுக்கும். அதேபோல் 1400 அரசுப் பணியிடங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நிரப்பப்படும்” இவ்வாறு அவர் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com