சொந்தமாகத் தொழில் தொடங்கலாம் வாங்க! முதல்வர் மருந்தகம் அமைக்க அழைப்பு!

Mudhalvar Marunthagam
MK Stalin
Published on

தமிழக அரசவையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று நான்காண்டுகள் முடியவுள்ளது. தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின், தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் முக்கியமான திட்டம் தான் முதல்வர் மருந்தகம். கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தின உரையில், ஜெனரிக் எனப்படும் பொது மருந்துகள் உள்பட பிற மருந்துகளும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கிடைப்பதற்காக முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

முதல்வர் மருந்தகத் திட்டத்தினை மிகச் சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 29.10.2024 அன்று தமிழ்நாடு முதல்வர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழக அதிகாரிகள் பங்கேற்றனர். அதிகாரிகளுக்கு, முதல்வர் மருந்தகங்கள் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மாவட்ட மருந்து சேமிப்புக் கிடங்குகளை அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து தேவையான அறிவுரைகளை வழங்கினார் முதல்வர்.

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் தேவையான அளவு பொது மருந்துகளை கொள்முதல் செய்து, முதல்வர் மருந்தகங்களுக்கு வழங்கும். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவுக் கழகம் மருத்துவம் சார்ந்த பிற உபகரணங்கள், ஆயுர்வேதம், சித்தா, டாம்கால், யுனானி, இம்காப்ஸ், நியூட்ராசூட்டிக்கல்ஸ் மற்றும் சர்ஜிக்கல் மருந்துகளை கொள்முதல் செய்து வழங்கும்.

பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும், புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கும் நோக்கத்திலும் முதல்வர் மருந்தகங்களை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, முதல்வர் மருந்தகங்களை அமைக்க ஆர்வமுள்ள நபர்கள், கூட்டுறவுத் துறை உதவியுடன் www.mudhalvarmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். திட்டத்தின் விவரங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களும் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

தகுதிகள்:

முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்பும் நபர் B.Pharm அல்லது D.Pharm சான்று பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேற்கண்ட சான்று வைத்திருக்கும் நபரின் அனுமதியுடனும் மருந்தகம் அமைக்கலாம்.

இதையும் படியுங்கள்:
குறுவை சாகுபடித் தொகுப்பு திட்டம் 2024: தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Mudhalvar Marunthagam

முதல்வர் மருந்தகம் அமைக்கத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் கடன் உதவியுடன் ரூ.3 இலட்சம் மானியமும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டு, வருகின்ற ஜனவரி 2025-க்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் மு‌.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஃபார்மஸி படிப்புகளைப் படித்து விட்டு, வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சொந்தமாக மருந்தகம் அமைக்க, முதல்வர் மருந்தகம் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வரும் ஆண்டில் இத்திட்டத்திற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து, மருந்தகங்களின் எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com