விவசாய உற்பத்தியை பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசு கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்படி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, ரூ.78.67 கோடி செலவில் குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து உள்ளதாக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டில் பருவமழை மாற்றத்தால் மேட்டூர் அணை நிரம்பவில்லை. இதனால் மேட்டூர் அணைத் திறப்பு சற்று தாமதமாகியுள்ளது. இது விவசாயிகளுக்கு மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம் என்றாலும், இதனை ஈடு செய்யும் பொருட்டு தமிழ்நாடு முதல்வர் குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்திற்காக ரூ.78.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் சிறப்பம்சங்களை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.
குறுவை சாகுபடித் தொகுப்புத் திட்டத்தில் வேளாண் விரிவாக்க மையங்களின் மூலம் ரூ.3.85 கோடி செலவில், 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் வழங்கப்படும்.
ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 வீதம் 1 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பிற்கு நெற்பயிர் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ரூ.40 கோடி நிதி வழங்கப்படும்.
நுண்ணூட்டச் சத்துக் குறையுள்ள 7,500 ஏக்கர் நிலப்பரப்பிற்கு 50% மானியத்தில் நெல் நுண்ணூட்டக் கலவையை விநியோகிக்க ரூ.15 லட்சம் அளிக்கப்படும். மேலும் துத்தநாக சத்துக் குறையுள்ள 25,000 ஏக்கர் நிலப்பரப்பில் துத்தநாக சல்பேட் உரத்தைப் பயன்படுத்த ஏக்கருக்கு ரூ.250 வீதம் ரூ.62,50,000 வழங்கப்படும். அதோடு 25,000 ஏக்கர் நிலப்பரப்பில் ஜிப்சம் உரத்தைப் பயன்படுத்த ஏக்கருக்கு ரூ.250 வீதம் ரூ.62,50,000 வழங்கப்படும்.
பயறு வகைப் பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க 50% மானியத்தில் தரமான விதைகள், சூடோமோனஸ், இலை வழி உரம் மற்றும் திரவ உயிரி உரம் தெளிக்க 10,000 ஏக்கருக்கு ஒரு கோடியே இருபது லட்சம் நிதி வழங்கப்படும். மேலும் இதில் மகசூலை அதிகரிக்க 20 லட்சம் செலவில் 10,000 ஏக்கருக்கு 50% மானியத்தில் நுண்ணூட்டச் சத்து அளிக்கப்படும்.
வேளாண் பொறியியல் துறையின் மூலம் விசை உழுவை, விதைக்கருவி, களையெடுக்கும் கருவி, உரமிடும் கருவி, சுழற் கலப்பை, இயந்திரக் கலப்பை, சாகுபடிக் கலப்பை, பலதானியப் பிரித்தெடுக்கும் கருவி, சூரிய சக்தியால் இயங்கும் பம்ப்செட் மற்றும் ஆளில்லா வானூர்திக் கருவி போன்ற 442 கருவிகளை விவசாயிகளுக்கு அளித்திட ரூ.7 கோடியே 52 லட்சம் நிதி மானியமாக வழங்கப்படும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகளில் ஈடுபவர்களுக்கு ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பினை ஈடுசெய்யும் வகையில், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை அளித்திட ரூ.24 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தினை விரைந்து செயல்படுத்திட தமிழ்நாடு முதல்வர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார் என எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.