

ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியுள்ளது , இஸ்ரேலின் இந்த நடவடிக்கையில் அமெரிக்காவும் கூட்டு சேர்ந்துள்ளது. தொடர்ச்சியாக கடந்த சில வாரங்களாக அமெரிக்கா– ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்துக் கொண்டே இருந்தது. அதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளை சுற்றியுள்ள கடல் பகுதிகளில், தங்களது போர்க்கப்பல்களையும் நிலை நிறுத்தியது. இந்நிலையில் எந்தவித ஒரு எச்சரிக்கையும் இன்றி இஸ்ரேல்- ஈரான் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலை "யூதாவின் கேடயம்" (Shield of Judah) என்று இஸ்ரேல் பெயரிட்டுள்ளது. இந்த தகவல் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்களை இஸ்ரேலிய பாதுகாப்பு துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இதை தொடர்ந்து தங்களின் உள்நாட்டில் மக்களை பாதுகாப்பாக இருக்க சொல்லி இஸ்ரேல் அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவும் இஸ்ரேல் மற்றும் ஈரானில் இருக்கும் இந்திய குடிமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் ஏவுகணைகள் மூலம் ஈரான் தலைநகர் டெஹ்ரானை தகர்த்து வருகிறது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டு சேர்ந்து, தெஹ்ரானின் வடக்கு மற்றும் கிழக்கிலும், இஸ்ஃபஹான், கராஜ் மற்றும் கெர்மன்ஷா போன்ற பகுதிகளில் ஏவுகணைகள் முலம் தாக்குதல்களை நடத்தினர்.
இந்த தாக்குதலில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள், புலனாய்வு அமைச்சகம் மற்றும் எர்பில் விமான நிலையம் ஆகியவை முக்கிய இலக்காக இருந்தன. இதில் ஈரானின் தலைநகர் பெரிய அளவில் அழிவை சந்தித்துள்ளது. நிலைமை மோசமாக இருப்பதால் ஈரான் தலைநகர் முழுக்க ஆம்புலன்ஸ் மயமாக இருக்கின்றன. தாக்குதில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்கின்றனர்.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் அதிகாரிகள் "நாங்கள் முந்திக் கொள்ளாவிட்டால் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி இருக்கும்" என்று தெரிவித்துள்ளனர். ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன், இஸ்ரேலின் மொசாட் உளவு நிறுவனம், அதன் அதிகாரப்பூர்வமான டெலிகிராம் சேனலில், "எங்கள் ஈரானிய சகோதர சகோதரிகளே, நீங்கள் தனியாக இல்லை! உங்களுக்காக மிகவும் பாதுகாப்பான, சிறப்பு வாய்ந்த டெலிகிராம் சேனலை நாங்கள் தொடங்கியுள்ளோம். ஒன்றாக இணைந்து ஈரானை அதன் பிரகாசமான எதிர்காலத்திற்கு திருப்புவோம்" என்று கூறியுள்ளனர்.
தெஹ்ரானின் ஜம்ஹூரி தெருவில் அமைந்துள்ள, ஈரானின் உச்ச தலைவரான அலி காமெனியின் அதிகாரப்பூர்வ அலுவலகம் மற்றும் வீட்டையும் இஸ்ரேல் விட்டு வைக்கவில்லை. இந்த தாக்குதல் நடைபெறும் நேரத்தில் கமெனி அவரது வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார் , முன்கூட்டியே தாக்குதலை உணர்ந்த அவர் தொலைதூர பதுங்கு குழிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். தற்போது அலி கமெனியின் வீட்டில் அவரது இளைய மகன் மொஜ்தபா இருந்து, அரசு நிர்வாகத்தினை வழி நடத்தி வருகிறார்.
சமீபத்தில் ஈரானில் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த போராளிகள் இந்த வீட்டை தாக்க முயற்சி செய்தனர். அதிலிருந்து கமெனி பதுங்கு குழியில் வசித்து வருகிறார். இஸ்ரேலிய ஊடகங்களின் தகவலின்படி, ஈரானிய ஜனாதிபதி மசூத் பஜேஷ்கியனையும் கொல்வதற்கு இஸ்ரேல் முயற்சி செய்துள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.