இஸ்ரேல் - ஈரான் இடையே தீவிரமடையும் போர்ப் பதற்றம்- இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

இஸ்ரேல்-ஈரான் மோதல் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
israel iran war risk of petrol price rising in India
israel iran war risk of petrol price rising in Indiaimg credit - indiatoday.in
Published on

மத்திய கிழக்கில் எலியும், பூனையுமாக இருக்கும் ஈரானும், இஸ்ரேலும் பரஸ்பரம் ராணுவ மோதலில் ஈடுபட்டுள்ளதால் போர்ப் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. தங்களுக்கு எதிராக ஈரான், அணு ஆயுதங்களை தயாரித்து வருவதாக குற்றம் சாட்டி, கடந்த 13-ந்தேதி அதிகாலையில் அந்த நாடு மீது இஸ்ரேல் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதலை தொடுத்தது.

‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என்ற பெயரில் தொடங்கிய இந்த ராணுவ நடவடிக்கை, தங்களை தற்காத்துக்கொள்ள நடத்தப்படும் முன்கூட்டிய தாக்குதல் என அறிவித்த இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத கட்டமைப்புகள், ராணுவ நிலைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளை 200-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மூலம் துல்லியமாக தாக்கியது.

உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த திடீர் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதிகள், 9 அணு ஆயுத விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் உள்பட 78 பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் இந்த திடீர் தாக்குதலுக்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்தது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் ஜெருசலேம், டெல் அவிவ் என இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து தாக்கியது.

இதையும் படியுங்கள்:
இஸ்ரேல் – ஈரான் போர் தொடக்கம்? இஸ்ரேலில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்!
israel iran war risk of petrol price rising in India

இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் 3-வது நாளாக நேற்றும் நீடித்து வருகிறது. நேற்று (ஜூன் 15) நள்ளிரவு இஸ்ரேலின் வான்வெளியில் ஈரானின் ஏவுகணைகள் சீறிப்பாய்ந்தன. நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் இஸ்ரேலில் 4 பேர் பலியானதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலடியாக டெஹ்ரானில் உள்ள இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு ஆலையில் இஸ்ரேல் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. மேலும் அங்குள்ள எண்ணெய் கிடங்கும் தாக்குதலுக்கு ஆளானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் எண்ணெய் கிடங்கு பற்றி எரிவதாகவும், பல அடி உயரத்துக்கு தீ ஜுவாலைகள் எழுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் சர்வதேச அளவில் எண்ணெய் மற்றும் கியாஸ் வினியோகம் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் இந்த நாடுகளின் மோதல் இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போதைய நிலையில் இந்தியா, இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சமமான நிலைபாட்டை கொண்டு உள்ளது. எந்த நாடுக்கும் ஆதரவாக இல்லை.

ஏனென்றால் இந்தியா இஸ்ரேலிடம் இருந்து டிரோன்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவிகளை பெறுகிறது. அதே வேளையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் அந்த நாட்டின் சபஹார் துறைமுகத்தை இந்தியா நிர்வகித்து வருகிறது.

ஒரு நாட்டுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டால் மற்றொரு நாட்டுக்கு எதிரியாகி விடும். உதாரணமாக இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினையில் துருக்கி, அஜர்பைஜான் ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. எனவே அந்த நாடுகளுடன் இருந்த ஒப்பந்த உறவுகளை இந்தியா முறித்துக்கொண்டது.

இதையும் படியுங்கள்:
இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 10 பேர் பலி!
israel iran war risk of petrol price rising in India

பாகிஸ்தான் விவகாரத்தில், இஸ்ரேல் இந்தியாவுக்கு நேரடியாக ஆதரவு அளித்தது. இருந்தபோதும் இஸ்ரேல்-ஈரான் மோதலில் நடுநிலையை கடைபிடிக்க வேண்டிய நிலையில்தான் இந்தியா உள்ளது. ஏனென்றால் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுத்தால் ஈரான் உள்பட அரபு நாடுகள் எல்லாம் இந்தியாவை எதிரியாக பார்க்க தொடங்கிவிடும். எனவே இருபக்கமும் சாயாமல் இந்தியா நடுநிலையில் உள்ளது.

இருந்தாலும் இந்த போர் நீடிக்கும் பட்சத்தில் இந்தியாவில் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை ஒரு ஆண்டின் கச்சா எண்ணெய் தேவை 251 மில்லியன் டன் ஆகும். அதில் 12 சதவீதம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.

மீதமுள்ள 88 சதவீதமான 221 டன் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த இறக்குமதியில் 100 சதவீதம் என்று கணக்கிட்டால், அதில் அதிகபட்சமாக 38 சதவீதம் ரஷியாவிடம் சலுகை விலையில் வாங்குகிறது.

2 சதவீதம் அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது. மீதமுள்ள 60 சதவீதம் முழுவதும் அரபு நாடுகளில் இருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக தான் இந்தியாவின் துறைமுகத்திற்கு வருகின்றன.

உலக எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் ஹார்மூஸ் ஜலசந்தி கடல் பாதை வழியாக செல்கிறது. அதாவது ஈரான் உள்பட அரபு நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் தங்களது கப்பலை ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக கொண்டு செல்கின்றன. இந்தியா, சீனா, தாய்லாந்து, தென்கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகள் மட்டுமின்றி, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஆப்பிரிக்க நாடுகளும் இந்த பாதை வழியாகத்தான் எண்ணெயை தங்களது நாட்டுக்கு கொண்டு வருகின்றன. இந்த ஹார்மூஸ் பாதையை இஸ்ரேல் தாக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் பொருளாதார ரீதியாக ஈரானையும், அதற்கு ஆதரவாக செயல்படும் சில நாடுகளையும் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கையை இஸ்ரேல் எடுக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. அதனால் அங்கு போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டு ஈரான், குவைத், பக்ரைன், கத்தார், ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி செய்ய முடியாது. எனவேதான் இஸ்ரேல் அதன் மீது குறிவைத்து இருக்கிறது. ஒருவேளை இந்த கடல்பாதை தாக்குதலுக்கு உள்ளானாலோ, மூடப்பட்டாலோ கப்பல்கள் போக்குவரத்து அடியோடு நின்று விடும். இதனால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

அதுமட்டுமின்றி போர் முழு அளவில் தொடங்கி விட்டால் இந்தியாவிற்கு ஈரான் மட்டுமின்றி மற்ற அரபு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதில் சிக்கல் இருக்கும். மேலும் அவர்கள் விலையையும் அதிகரித்து விடுவார்கள். தற்போது ஒரு பேரலுக்கு 77 டாலராக இருக்கும் கச்சா எண்ணெய் விலை 130 டாலர் வரை உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலை கடுமையாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்தியா இப்போதே அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்:
அமெரிக்காவின் ஒப்புதல்… இஸ்ரேல் நடத்திய தாக்குதல்… காசாவில் 200 பேர் பலி!
israel iran war risk of petrol price rising in India

ஒருவேளை அரபு நாடுகளில் இருந்து சிக்கல் ஏற்பட்டால் ரஷியாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com