அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பைக் கொல்ல ஈரான் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு ட்ரம்ப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியதால், அவரை தங்கள் "முதல் எதிரி"யாக ஈரான் கருதுவதாகவும், அதனால் அவரைக் கொல்ல முயற்சிப்பதாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பினை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் கூறியதைத் தொடர்ந்து காசா இஸ்ரேல் இடையே போர் வலுபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு அழித்த ஈரானுடன் இஸ்ரேல் போர் செய்ய ஆரம்பித்தது. தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. இருநாடுகளும் பதிலுக்கு பதில் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இப்படியான நேரத்தில் நேற்று (ஜூன் 15, 2025) ஒரு முன்னணி அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நெதன்யாகு இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். "ஈரான் ட்ரம்ப்பைக் கொல்ல விரும்புகிறது. அவர் தான் அவர்களின் நம்பர் ஒன் எதிரி. அமெரிக்காவின் நடவடிக்கைகளை அவர்கள் விரும்பவில்லை" என்று அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் ட்ரம்ப் நிர்வாகம் எடுத்த கடுமையான நிலைப்பாடுகளே இதற்குக் காரணம் என்றும் நெதன்யாகு சுட்டிக்காட்டினார்.
ஈரான் இதற்கு முன்பும் ட்ரம்ப்பைக் கொல்ல இருமுறை முயன்றதாகவும், ஆனால் அது நடக்கவில்லை என்றும் நெதன்யாகு மேலும் குறிப்பிட்டார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில், நெதன்யாகுவின் இந்தக் குற்றச்சாட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையே கடந்த சில நாட்களாக தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மோதல்கள் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றத்தை உருவாக்கியுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து ஈரானிடம் இருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ பதிலும் வெளியாகவில்லை. இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் மேலும் என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.