
ஐஆர்சிடிசி (IRCTC) என்பது இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (Indian Railway Catering and Tourism Corporation) சுருக்கமாகும். இது ரெயில் டிக்கெட் முன்பதிவு, ரெயில் பயணம் மற்றும் சுற்றுலா பேக்கேஜ்கள் போன்ற சேவைகளை வழங்க இந்திய ரெயில்வேயின் ஒரு துணை நிறுவனமாகும். நீங்கள் இந்தியன் ரெயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது செயலி மூலம் அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட பயண இணையதளங்கள் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இந்நிலையில் பயணிகள் ஆன்லைனில் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளில் சில மாற்றங்கள் கூடிய விரைவில் ஏற்பட உள்ளன. அதாவது வரும் அக்டோபர் 1-ம்தேதி முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவின் முதல் 15 நிமிடங்களுக்கு, ஆதார் சரிபார்ப்பு செய்யப்பட்ட பயனர்கள் மட்டுமே ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியும் என்று புதிய விதி அமலுக்கு வரவுள்ளது. தற்போது இதுபோன்ற விதி தட்கல் முன்பதிவில் மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தகக்கது.
உதாரணமாக, நீங்கள் நவம்பர் 15-ம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு செல்லும் முத்துநகர் எக்ஸ்பிரஸில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் என்றால், இதற்காக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விண்டோ செப்டம்பர் 16-ம் தேதி நள்ளிரவு 12.20 மணிக்குத் திறக்கும் போது, நீங்கள் 12.20 முதல் 12.35 வரை, உங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இதற்கு IRCTC கணக்கில் ஆதார் மட்டுமே சரிபார்க்கப்படும். உங்கள் கணக்கு ஆதார் சரிபார்க்கப்படவில்லை என்றால், விண்டோ திறந்த நேரத்தில் முன்பதிவு செய்ய முடியாது.
இந்தாண்டு ஜூலை மாதம் இந்திய ரயில்வே ஆன்லைன் மூலம் பயணிகள் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு ஆதாரை கட்டாயமாக்கியது. இந்த விதியின்படி, ஐஆர்சிடிசியின் மொபைல் செயலி மற்றும் வலைத்தளத்திலிருந்து ஆன்லைனில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, பயணிகளின் கணக்கு ஆதாருடன் சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். உங்கள் கணக்கு ஆதார் சரிபார்க்கப்படவில்லை என்றால், நீங்கள் தட்கல் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியாது என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொது ரெயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு தினமும் நள்ளிரவு 12.20 மணிக்குத் தொடங்கி இரவு 11.45 மணி வரை நீடிக்கும். அதேபோல் ரெயிலில் பயணம் செய்ய உள்ள நபருக்கு பயணம் செய்யும் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு பொது டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கும் என்றும் இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.