120 மணி நேரம் தொடர்ந்து சமையல் செய்து அயர்லாந்து கலைஞர் சாதனை!
ஜப்பானை அடிப்படையாக் கொண்டு செயல்படும் ஆலன் பிஃஷர் என்னும் அயர்லாந்து சமையல் கலைஞர் தொடர்ந்து 119 மணி நேரம், 57 நிமிடங்கள் ஓய்வில்லாமல் சமையல் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் நைஜீரியாவைச் சேர்ந்த ஹில்டா பாஸி என்பவர் செய்த சாதனையைவிட 24 மணிநேரம் கூடுதலாக சமைத்து அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார். மாட்ஸூ என்னும் இடத்தில் உள்ள தமது உணவகத்தில் இந்த சாதனையைச் செய்துள்ளார்.
நீண்ட நேரம் சமையல் செய்வது மட்டுமல்ல, தொடர்ந்து 47 மணி நேரம் 21 நிமிடங்கள் பேக்கரி பொருள்களைத் தயாரித்தும் அவர் மராத்தான் சாதனை படைத்துள்ளார். பேக்கிங் செய்வதில் அமெரிக்காவைச் சேர்ந்த வெண்டி சாண்டனரின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
ஒரே சமயத்தில் அவர் சமையல் செய்வதிலும், பேக்கிங் பொருள்களைத் தயாரிப்பதிலும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதலில் 119 மணி 57 நிமிடங்களில் சமையல் சாதனையையும், அதன் பிறகு ஒருநாள் ஓய்வுக்குப் பிறகு 47 மணி நேர பேக்கிங் பொருட்கள் தயாரித்தும் சாதனை படைத்துள்ளார்.
சாதனைகள் என்பதே முறியடிப்பதற்குத்தான். நான் இன்று சமையல் கலை மற்றும் பேக்கிங் பொருள்கள் தயாரித்தல் ஆகிய இரண்டிலும் உலக சாதனை படைத்துள்ளேன். இதற்காக நான் தூக்கமில்லாத இரவுகள், அதிகாலை வேலை மற்றும் நிதிச்சுமைகளை ஏற்கவேண்டியிருந்தது.
விடாமுயற்சிதான் எனக்கு வெற்றியை தேடித்தந்தது. சாதனைகளை முறியடித்தால்தான் புதிய சாதனை படைக்க முடியும். மேலும் எனது செயல் மூலம் மட்ஸுவில் ஐரிஷ் தொடர்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினேன் என்கிறார் ஆலன் பிஃஷர்.
இவரது சாதனைகளுக்கு இணையத்தில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. பலரும் அவரது சாதனையை பாராட்டியுள்ளனர். “ இந்த மனிதர் 2 சாதனைகளை புரிந்துள்ளார். நீண்டநேர சமையல் மராத்தான் மற்றும் நீண்டநேர பேக்கரி பொருள்கள் தயாரித்தல் என இரு சாதனைகளை படைத்துள்ளார். அதுவும் 160 மணி நேரம் சமையலறையில் இருந்துள்ளார். நல்ல செயலைச் செய்துள்ள அவரை பாராட்டத்தான் வேண்டும்” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

நீண்ட நேரம் சமையல் செய்து சாதனை படைப்பது சாதாரணமான விஷயமல்ல. அவரை நேரில் பாராட்ட வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். ஆனாலும் எங்களது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று மற்றொருவர் விமர்சித்துள்ளார். நீண்ட நேர சமையல் செய்து பெண்கள் பிரிவில் ஹில்டா பாஸி சாதனை படைத்துள்ளார். அதேபோல ஆடவர் பிரிவில் ஆலன் பிஃஷர் சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகள் என்று மூன்றுவது நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.