
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க் பற்றி அனைவருக்கும் தெரியும். அதிரடியான பலவித செயல்களுக்கு எலான் மஸ்க் பெயர் பெற்றவர். அதேபோல் எப்போதும் தன்னை சுற்றி சர்ச்சைகளை ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் எப்போதும் மீடியாக்களின் பார்வையில் , முன்னணி இடத்தில் இருப்பவர் அவர். அமெரிக்காவில் இறுதியாக நடந்த தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவதற்கு எலான் மஸ்க் பல பணிகளை செய்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் பல ஆயிரம் கோடி டாலர்கள் பணத்தினையும் செலவழித்து இருந்தார்.
எலான் மஸ்க் போலவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் பெரிய கோடீஸ்வரர் தான். ட்ரம்ப்பும் எப்போதும் அதிரடியான நடவடிக்கைகளுக்கும் சர்ச்சைக்குரிய பேச்சுகளுக்கும் பெயர் பெற்றவர். இதனால் , எப்போதும் விளம்பரத்தின் உச்சத்தில் இருக்கிறார்.
கடந்த தேர்தலில் இவர்கள் இருவரும் இணைந்தது பெரிய அளவில் பேசுபொருளானது. அதே நேரத்தில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றிக்கு எலான் மஸ்கின் பங்களிப்பும் இருந்தது. இதுநாள் வரை இருவரும் ஒற்றுமையாக இருந்து அமெரிக்காவை வழிநடத்திக் கொண்டிருந்தனர். தற்போது இருவருக்கும் கடுமையான புகைச்சல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் வார்த்தை போரில் தாக்கிக் கொள்கின்றனர்.
இது போன்ற நடைமுறை அரசியல் இந்தியாவில் மட்டுமே இருந்துள்ளது. தற்போது இந்திய பாணி வார்த்தை தாக்குதல் அரசியலை அமெரிக்காவும் பின்பற்ற தொடங்கிவிட்டது. இனி அமெரிக்கர்களுக்கும் அரசியல் நல்ல பொழுதுபோக்காக இருக்கும். இருவரின் வாய் சண்டையில் எது நிஜமோ இல்லையோ இருவரும் எப்போதும் மீடியாக்கள் மத்தியில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என்ற முனைப்பில் இருப்பது தெரிகிறது.
டிரம்ப் - மஸ்க் பிரிவுக்கு பின்னர், எலான் மஸ்க் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்த வாரம் ஒரு புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவது பற்றி எலான் மஸ்க் பகிரங்க யோசனையை முன் வைத்தார்.
கடந்த வியாழக்கிழமை அன்று மஸ்க் தனது X தளத்தில் "அமெரிக்காவில் 80% மக்களை முன்னிலைப்படுத்தும் ஒரு புதிய அரசியல் கட்சியை தொடங்க வேண்டிய நேரம் இது, என்று அவர்கள் நினைக்கிறார்களா?" என்று ஒரு கருத்துக்கணிப்பை நடத்தினார்.
இந்தக் கருத்துக்கணிப்பில் பதிலளித்தவர்களில் 80% பேர் புதிய அரசியல் கட்சி தொடக்கத்தை ஆதரிப்பதாக எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்தார். மேலும் "இது விதி," என்று அவர் வெள்ளிக்கிழமை மாலை ஒரு பதிவிட்டார். ஒரு பின்தொடர்பவர் புதிய கட்சிக்கு "அமெரிக்கா கட்சி" என்று பெயரிட வேண்டும் என்று தெரிவித்த கருத்திற்கு மஸ்க் ஆதரவு கொடுத்தார்.
புதிதாக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்குவது எளிது, ஆனால், செயல்முறையில் அதை நடைமுறைக்கு கொண்டு வர அமெரிக்காவில் பல சட்டங்கள் உள்ளன. ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியை அடுத்து சில பெரிய கட்சிகள் ஏற்கனவே ஒவ்வொரு மாநிலத்திலும் 3-வது கட்சியாக வாக்குச்சீட்டைப் பயன்படுத்துகின்றன. புதிய கட்சிகள் போட்டியிட பல விதிகள் மாநில வாரியாக உள்ளன.
இந்நிலையில் மஸ்க் தனது X தளத்தில் "டிரம்ப் இன்னும் 3.5 ஆண்டுகள் ஜனாதிபதியாக இருப்பார், ஆனால், நான் 40+ ஆண்டுகள் ஜனாதிபதியாக இருப்பேன் என்று பதிவிட்டிருந்தார். இது அவரது அரசியல் ஆசையை பகிர்வதாக இருந்தது.