தற்போது உலகில் பெரும் பணக்காரரான எலான் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு 170 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இவரைப் போலவே இந்த உலகில் பல பணக்காரர்கள் இருந்தாலும், வெறும் 30 ஆண்டுகளில் இவர் அளவுக்கு உச்சத்தை யாரும் அடைந்திருக்க மாட்டார்கள்.
செயற்கைக்கோள் மூலம் இன்டர்நெட் வழங்குவது, செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது என இவருடைய திட்டங்கள் அனைத்துமே எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இருக்கும். ஏன்? தற்போது இந்த உலகையே தலைகீழாக மாற்றிக் கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, சீப் வடிவில் மனித மூளையில் பொருத்தம் ஆராய்ச்சியை, எலான் மஸ்க் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டார் என்றால், அவருடைய தொலைநோக்கு நம்மை வியக்க வைக்கிறது.
இந்த அளவுக்கு அசாத்திய அறிவாற்றலைக் கொண்டிருக்கும் எலான் மஸ்கின் தைரியமும் கோபமும் அதைவிட அதிகம் என்கிறார்கள். தான் பதிவிட்ட ட்வீட்டை நீக்கியதற்காக பல லட்சம் கோடி கொடுத்து Twitter நிறைவனத்தையே முழுவதுமாக வாங்கிவிட்டார். அது மட்டுமல்லாமல், எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்களை சாதாரணமாகக் கிண்டல் செய்து விடுவார்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் முதல் மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுகர்பெர்க் வரை அனைவரையுமே வம்புக்கு இழுத்துள்ளார். அப்படிதான் சமீபத்தில் ஏற்பட்ட சண்டையால் இவருக்கும் மார்க் ஜுகர்பெர்க்குக்கும் கைகலப்பு ஏற்படப்போகிறது.
இப்படிப்பட்ட பெரிய ஆளுமைக்கு அதிபயங்கர கோபம், பயம் இல்லா துணிவு இருப்பதற்கு அவருடைய குழந்தை பருவம் காரணம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
ஆம், அவருடைய குழந்தைப் பருவம் மிக மோசமாக இருந்திருக்கிறது. சிறுவயதில் தான் ஆசைப்பட்ட எதுவுமே அவருக்குக் கிடைக்கவில்லை. வாழ்க்கையின் அடிதட்டு நிலையிலிருந்து மெல்ல மெல்ல உயர்ந்து, அப்பாவின் தொழில் முடங்கிய போது குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். ஒரு சாதாரண மனிதன் வாழ்வில் நடக்கும் அனைத்து கசப்பான சம்பவங்களும் அவர் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. இப்படிப்பட்ட பல துயரங்களுக்கு நடுவே அவருடைய வெற்றி மட்டுமே நிம்மதியை தந்திருக்கிறது. இவருடைய வெற்றிக்கு முக்கிய காரணமாக எலான் மஸ்கின் கோபம் சொல்லப்படுகிறது.
தொழில் சார்ந்த எந்த முடிவெடுத்தாலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகக் கடுமையாக நடந்து கொள்வாராம். அவரது நிறுவனங்களில் பணிபுரியும் முக்கிய நிர்வாகிகளிடமே எவ்வித பாரபட்சமுமின்றி கோபத்தை வெளிப்படுத்துவாராம். அந்த சமயத்தில் அவர் மீது பயம் வருவது மட்டுமின்றி, அவருக்கு உளவியல் ரீதியாக ஏதோ பிரச்சனை இருப்பது போன்றே நடவடிக்கைகள் இருக்கும் என்கின்றனர். இந்த விஷயம் தான் அவருக்கு பின்னாளில் மிகப்பெரும் வெற்றியை தந்திருக்கிறது என்பது ஆச்சரியம். இந்த கோபம் காரணமாகவே அவரது முன்னாள் மனைவியும் இவரை விட்டு பிரிந்துவிட்டார்.
இவரது கோபம் குறித்து அவரது மனைவியே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். "என்னதான் இவர் கடுமையான கோவக்காரராக இருந்தாலும் அந்த சமயத்தில் யாரையும் காயப்படுத்த மாட்டார். இப்படிப்பட்ட குணாதிசயங்களை நான் பார்த்ததில்லை. அது அவரின் மோசமான கடந்த காலத்தின் விளைவாக இருக்கலாம்" என எலான் மஸ்கின் மனைவி விவரித்துள்ளார்.