வெயிலின் வெப்பத்தைத் தணிக்க குளிர்பானங்களை நாடுவது சரியா?

வெயிலின் வெப்பத்தைத் தணிக்க குளிர்பானங்களை நாடுவது சரியா?
Published on

மிழ்நாட்டில் பல மாவட்டங்களில் மழை பெய்து வெயிலின் தாக்கத்தை சற்று குறைத்தாலும், சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள மக்கள் பல வழிமுறைகளைக் கையாளுகின்றனர். பகல் நேரங்களில் வெப்பத்தை தணித்துக்கொள்ள பலருடைய பிரதான தேர்வாக இருப்பது குளிர்பானங்கள்தான். 

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பழரசக் கடைகளும், குளிர்பானக் கடைகளும் புற்றீசல் போல முளைத்துள்ளன. மக்களின் தேவைக்கேற்ப பத்து ரூபாய் முதல் கிடைக்கும், பாட்டில்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களுள் பெரும்பாலானவை, தரமற்றதாகவும் முறையாக பதிவு செய்யாத நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டதாகவும் இருக்கின்றன. வெயில் நேரத்தில் இயற்கையான பழரசங்களைப் பருக நினைத்தாலும், பல இடங்களில் அதன் விலை காரணமாக பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களையே மக்கள் அதிகம் நாடிச்செல்வதாகக் கூறப்படுகிறது. 

அடைத்து வைக்கப்பட்டு இருக்கக்கூடிய மற்றும் தரமற்ற குளிர்பானங்களை வாங்கிக் குடிப்பது மூலம், பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சர்க்கரை நோய், குறைந்த ரத்த அழுத்தம், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக கூறும் மருத்துவர்கள், வெயில் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர். 

மேலும் வெயில் நேரத்தில் உடலைக் குளுமைப்படுத்த தர்பூசணி பழச்சாறு, கீரை வகைகள், கேரட்டுகள் போன்ற இயற்கை வஸ்துக்களை சாப்பிடுவது நல்லது என்றும் தெரிவிக்கின்றனர். ஏனெனில் பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களில் அதிகப்படியாக இருப்பது சர்க்கரை அளவுதான். அதை உட்கொள்வதால் உடலுக்கு எவ்விதமான நல்ல சத்துக்களும் கிடைப்பதில்லை. இதுவே நேரடி பழச்சாறுகளாக நாம் பருகும்போது, உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் கிடைத்து விடுகிறது. குறிப்பாக இதில் சர்க்கரை அளவும் குறைவாக இருப்பதால் உடலுக்கு அதிகப்படியான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. பாட்டிலில் அடைக்கப்பட்ட பானங்களைப் பருகும்போது, உடலில் ஏற்படும் குளிர்ச்சியை விட, இயற்கையான பழச்சாறானது உடல் வெப்பத்தை அதிகம் தணிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். 

வெயில் நேரங்களில் வெளியில் செல்லும்போது கையில் தண்ணீர் பாட்டிலுடன் செல்வது அவசியம் எனக் கூறும் மருத்துவர்கள், அவ்வாறு இல்லையென்றால் தர்பூசணி கிர்ணி உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பழங்களை எடுத்துக் கொள்வதே உடலுக்கு நல்லது என்றும் தெரிவிக்கின்றனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com