RO வாட்டர் நல்லதா? கெட்டதா? - RO தண்ணீர் குடித்தால் சத்து குறைபாடு ஏற்படுமா..?

RO சுத்திகரிப்பு முறையில் நீரில் உள்ள நன்மை தரும் தாதுகளும் நீக்கப்படுவதாகவும் அது சில எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் பல ஆண்டுகளாகச் சந்தேகங்களும் விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளது.
Water purifier
Water purifierAI generated
Published on

RO தண்ணீரை நீண்ட காலமாக உட்கொள்வது சத்து குறைபாட்டுக்கு வழிவகுக்கும் என்று பலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் RO ஒரு பெரிய உடல்நலக் கவலையை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

உடலின் சீரான இயக்கத்திற்கும், ஆரோக்கியத்திற்கும், நச்சுக்களை வெளியேற்றவும் தினசரி சுத்தமான குடிநீர் அவசியம். அந்த வகையில் இன்று பலரது வீடுகளிலும் பிரிட்ஜ், ஏசி, கேஸ் அடுப்பு போலவே வாட்டர் பியூரிஃபையர் எனப்படும் நீர் சுத்திகரிப்பானும் அவசியமான ஒன்றாகி விட்டது. தற்போதுள்ள பரபரப்பான வாழ்க்கை சூழலில் தண்ணீரை காய்ச்சி ஆறவைத்து குடிக்க மக்களுக்கு நேரமில்லை. அதனாலேயே இன்று அனைவரது வீடுகளிலும் குடிநீரை நமக்குச் சுத்தப்படுத்தித் தரும் வாட்டர் பியூரிஃபையர்கள் தான் பிரபலமாக இருக்கிறது. அதில் குறிப்பாக RO தொழில்நுட்பத்தின் கீழ் இயங்கும் வாட்டர் பியூரிஃபையர்களே மிகவும் பிரபலமானது. இது குடிநீரில் உள்ள அசுத்தங்கள், மைக்ரோ உலோகங்கள் உள்ளிட்ட மாசுகளை அகற்றி, தண்ணீரைக் குடிப்பதற்கு மிகவும் பாதுகாப்பானதாக மாற்றுகிறது.

இருப்பினும், இந்த RO சுத்திகரிப்பு தண்ணீரில் இருந்து நன்மை பயக்கும் தாதுக்கள் நீக்கப்படுவதாகவும், இந்த தண்ணீரை குடிக்கும் போது நாளடைவில் உடலில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் எனப் பலரும் சொல்கிறார்கள். இதனால் வீட்டுகளில் RO வைத்துள்ளவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். RO குறித்து பரவும் இந்த தகவல் உண்மை தானா..என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாங்க.

இதையும் படியுங்கள்:
கேன் வாட்டர் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு… உணவு பாதுகாப்புத் துறை அளித்த அறிவுரை!!
Water purifier

RO தண்ணீரை நீண்ட காலமாக உட்கொள்வது தாதுப் பற்றாக்குறை அல்லது எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்று பலர் கவலைப்படுகிறார்கள். அதாவது RO சுத்திகரிப்பு முறையில் நீரில் உள்ள நன்மை தரும் தாதுகளும் நீக்கப்படுவதாகவும் அது சில எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் பல ஆண்டுகளாகச் சந்தேகங்களும் விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளது.

ஆனால் RO பில்டர் சில தாதுக்களைக் குறைக்கும் என்றாலும், பெரும்பாலான மக்களுக்கு, குறிப்பாக சமச்சீரான மற்றும் சத்தான உணவைப் பின்பற்றும்போது, அது ஒரு பெரிய உடல்நலப்பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக RO நீர் சுத்திகரிப்பு முறையில் கரைந்த உப்புகள், வைரஸ்கள், பாக்டீரியா, ஆர்சனிக், ஈயம், நீரில் உள்ள உலோகங்கள் மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் அசுத்தங்கள் அனைத்தும் நீக்கப்படுகிறது. அதாவது நிலத்தடி நீரில் அதிகளவு மாசு இருக்கும். அதுபோன்ற இடங்களில் குடிநீர் தரத்தை மேம்படுத்துவதில் semi-permeable membrane செயல்முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

இந்த முறையில் 100 சதவீதம் தண்ணீரைச் சுத்தமாக வடிக்கட்டிவிடும். ஆனால், அதற்கு மாசு மற்றும் சத்துகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் தெரியாது என்பதால் மாசையும் சேர்த்து கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சில வகையான இயற்கையான தாதுகளை வடிகட்டிவிடும். சுருக்கமாக சொல்வதென்றால், RO செயல்முறை, 100 சதவீதம் சுத்தமான மாசு இல்லாத தண்ணீராக மட்டும் மாற்றாமல், சத்து இல்லாத நீராகவும் மாற்றிவிடும்.

ROவின் ‘அதிகப்படியான தூய்மை’ காரணமாகவே இந்த நீரை ஆரோக்கியமற்றது எனப் பலரும் கருதுகிறார்கள். ஆனால், வல்லுநர்கள் இதற்கு வேறுவிதமான விளக்கத்தை அளிக்கின்றனர். அதாவது, RO வடிகட்டுதல் தண்ணீரில் உள்ள சில தாதுக்களைக் குறைக்கலாம் என்றாலும், உடல் முதன்மையாக குடிநீரை விட நாம் அன்றாடம் உண்ணும் உணவுகளிலிருந்து இந்த ஊட்டச்சத்துக்களைப் பெறுகிறது என்பதால் RO நீரினால் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்படும் என்பது தவறான பார்வை என்கிறார்கள் மருத்துவர்கள்.!

அதாவது, பெரும்பாலான மக்களுக்கு குடிநீர் இந்த ஊட்டச்சத்துக்களின் முதன்மை ஆதாரம் அல்ல என்பதை அவர் வலியுறுத்துகிறார். “பெரும்பாலான கால்சியம் மற்றும் மெக்னீசியம் தண்ணீரிலிருந்து அல்ல, உணவில் இருந்து வருகிறது,” என்றும் கூறுகின்றனர்.

RO தண்ணீர் மூலம் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுகள் நமக்கு மிகக் குறைந்த அளவில் கிடைக்கும் அதேவேளையில், பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரத ஆதாரங்கள் அடங்கிய சமச்சீரான உணவின் மூலம் அதிகளவு ஊட்டச்சத்துத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

பெரும்பாலான மக்களுக்கு, முறையாக சுத்திகரிக்கப்பட்ட RO தண்ணீரைக் குடிப்பது குறிப்பிடத்தக்க உடல்நல ஆபத்தை ஏற்படுத்தாது.

இதையும் படியுங்கள்:
RO Water Vs Can Water: எதுதான் பெஸ்ட்?
Water purifier

தண்ணீரில் உள்ள தாதுக்கள் இழப்பு பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக, ஆரோக்கியமான உணவைப் பராமரிப்பது, நன்கு நீரேற்றமாக இருப்பது மற்றும் உங்கள் நீர் சுத்திகரிப்பு அமைப்பு சரியாக பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதில் கவனம் செலுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதேபோல் RO நீரில் உள்ள தாது உள்ளடக்கம் சிறுநீரக ஆரோக்கியத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்பதை சிறுநீரக நிபுணர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

மும்பை சென்ட்ரலின் வோக்ஹார்ட் மருத்துவமனைகளின் ஆலோசகர் சிறுநீரக மருத்துவர் டாக்டர் நிகில் பாசின், RO சுத்திகரிப்பு என்பது தண்ணீரில் உள்ள அசுத்தங்கள் மற்றும் மாசுபாடுகளை அகற்றி இறுதியில் நீரை பாதுகாப்பானதாக்குகிறது. இந்த செயல்முறை கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சில தாதுக்களைக் குறைக்கக்கூடும் என்றாலும், இது பொதுவாக சிறுநீரக செயல்பாட்டிற்கு பிரச்சனையை ஏற்படுத்தாது. நாள் முழுவதும் போதுமான அளவு பாதுகாப்பான மற்றும் சுத்தமான தண்ணீரைக் குடிப்பது சிறுநீரகங்கள் அவற்றின் முக்கிய செயல்பாடுகளைச் செய்ய உதவுகிறது என்கிறார். அதேபோல் உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாவிட்டால் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று டாக்டர் பாசின் குறிப்பிடுகிறார்.

அதேபோல RO தண்ணீர் உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையைப் பாதிக்கக்கூடும் என்ற குற்றச்சாட்டிற்கு, தினசரி நீரேற்றத்தின் ஒரு பகுதியாக முறையாக சுத்திகரிக்கப்பட்ட RO தண்ணீரைக் குடிப்பது ஆரோக்கியமான நபர்களில் எலக்ட்ரோலைட் சமநிலையை கணிசமாக பாதிக்காது என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது நமது உடலில் சிறுநீரகங்கள், ஹார்மோன்கள் மற்றும் உணவு எனச் சிக்கலான முறை மூலமாகவே எலக்ட்ரோலைட் பராமரிக்கப்படுகிறது. உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்களும் உணவு மூலமாகவே பிரதானமாகக் கிடைப்பதால் RO தண்ணீர் அதற்குக் காரணமில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

சுருக்கமாக சொல்வதென்றால், பெரும்பாலான மக்களுக்கு, நீண்ட கால RO தண்ணீர் மட்டும் பெரிய சேதத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை என்று டாக்டர் பாசின் கூறுகிறார். அதாவது உணவின் தரம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கை முறை தண்ணீரின் தாது உள்ளடக்கத்தை விட மிக முக்கியமானது.

சாராம்சத்தில், RO அமைப்புகள் நன்மை பயக்கும் தாதுக்களை நீக்குகின்றன என்றாலும், அவை சீரான உணவை உண்ணும் ஒருவருக்கு குறைபாட்டிற்கு முதன்மையான காரணியாக அரிதாகவே இருக்கின்றன என்று அவர் முடிக்கிறார்.

இதையும் படியுங்கள்:
RO இல்லாமல் நீரை சுத்திகரிக்கும் 5 எளிய வழிமுறைகளை காண்போம்!
Water purifier

எனவே, ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது RO வாட்டர் பாதுகாப்பானதாகவே இருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com