ரஷ்யா உக்ரைன் இடையிலான போரில் அமெரிக்கா உக்ரைனுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. அந்தவகையில், தற்போது அமெரிக்கா உக்ரைனுக்கு 5 லட்சம் கோடி தரவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே பல காலமாக போர் நடந்து வருகிறது. இதில், அமெரிக்கா உக்ரைனுக்கு பல உதவிகளை செய்து, ரஷ்யாவிக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது, அமெரிக்கா 61 பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 5 லட்சம் கோடியை உக்ரைனுக்கு வழங்கவுள்ளது. இதன்மூலம் உக்ரைன் மிக சக்தி வாய்ந்த ஆய்தங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை, கிட்டத்தட்ட 1,200 ரஷ்ய ஏவுகணைகள், 1,500 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 8,500 வழிகாட்டி வெடிகுண்டுகளால் உக்ரைன் தாக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற ரஷ்யாவின் பலம்வாய்ந்த தாக்குதல்களிலிருந்து, உக்ரைனின் முக்கிய நகரங்கள், ஆற்றல் ஆலைகள் போன்ற உள்கட்டமைப்புகளை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியம்.
ரஷ்யாவின் கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள், மேம்படுத்தப்பட்ட S-300 மற்றும் S-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள், ஈரானில் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஷாஹெத்-136 ட்ரோன்கள் ஆகியவை பெரியளவில் ஏவப்படுவதால் அவற்றை எதிர்கொள்வது உக்ரைனுக்கு கடினமானதாக இருக்கிறது.
இதுவரை, உக்ரைன் தனது கிழக்கு பகுதியில் கிட்டத்தட்ட 225 சதுர மைல் அளவு பகுதியை ரஷ்யாவிடம் இழந்துள்ளது. இதற்கு பீரங்கி பற்றாக்குறையே காரணம். இதன் காரணமாகத்தான், அமெரிக்கா தற்போது 5 லட்சம் கோடி நிதியுதவி செய்யவுள்ளது. இதன்மூலம் உக்ரைன் பலம் வாய்ந்த ஆயுதங்களையும், ரஷ்யாவின் ஆயுதங்களை முறியடிக்கும் ஆயுதங்களையும் வாங்கும் திட்டத்தில் உள்ளது.
இருப்பினும், இப்போது உக்ரைன் வாங்க நினைக்கும் ஆயுதங்களால், ரஷ்யாவைத் திணறடிக்க முடியாது. இந்த ஆயுதங்களால், உக்ரைன் தனது எல்லைப் பகுதிகளையும், முக்கிய நகரங்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும். குறிப்பாக உக்ரைன், ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலை முறியடிக்கும் விதமாக வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.