
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி 2 அடுக்குகளாக மாற்றப்பட்டன. மேலும், இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு கடந்த செப்டம்பர் 22-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் முதல் எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள் மற்றும் பல்வேறு உபகரணங்கள் முதல் ஆட்டோமொபைல்கள் வரை சுமார் 375 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலையும் குறைந்துள்ளது. குறிப்பாக கார்கள் விற்பனை இதுவரை இந்தியாவில் இல்லாத அளவிற்கு நடந்து உள்ளது.
ஜிஎஸ்டி வரி விகித சீர்திருத்தம் என்பது பண்டிகை காலமான தீபாவளியை ஒட்டி வந்திருப்பதால் வீட்டு உபயோக பொருட்களை வாங்குபவர்கள் , துணிமணி எடுப்பவர்களுக்கெல்லாம் இந்த ஜிஎஸ்டி வரி திருத்தம் ஒரு பெரிய அளவிலான சேமிப்பை ஏற்படுத்தி தரும் என்பதால் சாமானிய மக்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.
தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் பெண்களுக்கு ஷாப்பிங் செய்வது என்றால் அலாதி பிரியம். அதுவும் பண்டிகை காலங்களில் வரும் புதுப்புது டிசைன் புடவை மற்றும் ஆடைகளை வாங்கி அணிந்து கொண்டு தங்கள் சொந்த பந்தங்களிடம் பந்தா காட்ட வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளத்தில் ஒரு தகவல் பரவி அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அதாவது நீங்கள் துணிக்கடைக்கு சென்று 2,500 ரூபாய்க்குள் ஆடைகள் வாங்கினால் 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் எனவும், அதுவே 5,000 ரூபாய்க்கு மேல் ஆடை வாங்கினால் 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படும் என்றும் அதனால் ஆடைகள் வாங்கும் போது பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் எனப் பரவும் என்றும் தகவல்கள் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு முன்பு 2,500 ரூபாய் வரை துணிகள் வாங்கினால் அதற்கு ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதமாக விதிக்கப்பட்ட நிலையில் அது தற்போது மாற்றப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி திருத்தத்தின் படி 5 சதவீதம் என குறைக்கப்பட்டுள்ளதால் அதன் மூலம் நமக்கு 7% தொகை சேமிக்க முடியும். ஆனால் அதில் தற்போது ஒரு சிறிய மாற்றம் செய்யப்பட்டு அதாவது ரூ.2,500-க்கு மேல் ஒரு ஆடையின் விலை இருந்தால் அதற்கு வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
தற்போது நீங்கள் கடைக்கு சென்று புதிய ஆடைகள் வாங்கும்போது பில் கட்டணம் ரூ.2,500 வரை இருந்தால், 5 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது. அதுவே பில் கட்டணம் ரூ.2,500-ஐ விட அதிகமாக இருந்தால் அதாவது 2,510 ரூபாய் இருந்தால் கூட 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்டணம் செலுத்தவேண்டும்.
ஆகவே 5000 ரூபாய்க்கு புதுத்துணிகள் வாங்கும் போது பில் தொகையை ரூ.2,500 என இரண்டாக பிரித்து போட்டு வாங்கினால் ஜி.எஸ்.டி. குறையும் என்பது தவறான தகவலாகும். ஆனால் இந்த உண்மை நிலையை அறியாமல் பலரும் மொத்தமாக ஜவுளி வாங்கும்போது ரூ.2,500-க்கு மேல் பில் வந்தால் பிரித்து, பிரித்து பில் போட சொல்கின்றனர். அதாவது ரூ.2,500 விலை வருவதால் ஜி.எஸ்.டி.யை குறைக்க இதுபோல் செய்கின்றனர்.
உதாரணமாக, நீங்கள் ரூ.2,000 மதிப்புள்ள ஒரு சுடிதார் வாங்கினால் அதற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டியும், அதே நேரத்தில், ரூ.3,000 மதிப்புள்ள ஒரு புடவையும் அதனுடன் சேர்த்து வாங்கினால், 3,000 ரூபாய் புடவைக்கு மட்டும் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். எனவே ஒரே பில்லில், இரண்டு பொருட்களுக்கும் தனித்தனியாகவே ஜிஎஸ்டி கணக்கிடப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர். எனவே பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.