

தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. குறிப்பாக கூட்டணி விவகாரத்தில் திமுக மற்றும் அதிமுக பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி) மற்றும் அமமுக உள்ளிட்ட பல கட்சிகள் சேர்ந்துள்ளதால் அக்கட்சி பலமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் தவெக கூட்டணியில் இணைய இதுவரை எந்தக் கட்சியும் முன்வரவில்லை என்பது சற்று கவலை அளித்தாலும், விஜய் நம்பிக்கையுடன் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.
இன்னும் தேமுதிக, பாமக (ராமதாஸ்) மற்றும் ஓபிஎஸ் அணி ஆகியோர் மட்டுமே கூட்டணியில் இணையாமல் உள்ள நிலையில், இவர்கள் தவெக-வில் இணைந்தால் அது கூடுதல் பலமாக பார்க்கப்படும். ஆனால் தேமுதிக மற்றும் ஓபிஎஸ் அணியினர் அதிமுகவில் இணைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதால் தவெக தனித்துப் போட்டியிடும் சூழலில் உள்ளது.
இது தவிர காங்கிரஸின் ஒரு தரப்பினர் தவெக-வில் கூட்டணி வைக்க விரும்புவதாகவும் தகவல்கள் வெளி வருகின்றன. இதனை செங்கோட்டையனும் உறுதி செய்துள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் தற்போது பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. முதல் தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை நேற்று ஒதுக்கியது தேர்தல் ஆணையம். விசில் சின்னம் கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடன் இருக்கும் தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் அரசியல் களத்தில் அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் வருகின்ற ஜனவரி 25 ஆம் தேதி பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தவெக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக எந்தவித கூட்டத்திலும் பங்கேற்காத விஜய் தற்போது நாளை மறுதினம் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் பங்கேற்று பேச இருக்கிறார். இந்த கூட்டத்தில் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணியா என்பது குறித்த முடிவுகளை விஜய் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கரூர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணை மற்றும் ஜனநாயகம் சென்சார் பிரச்சினை உள்ளிட்டவற்றில் விஜய் கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் தவெக-விற்கு விசில் சின்னம் கிடைத்தது விஜய்க்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது. என் காரணமாக நாளை மறுதினம் நடக்கப் போகும் செயல்வீரர்கள் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகளை விஜய் எடுப்பார் என்று தெரிகிறது.
அதிமுக பாஜக கூட்டணியில் தவெக இணையுமா என்று மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனிடம் கேட்டபோது, அதற்கான வாய்ப்புகள் இல்லை எனவும் இருப்பினும் தலைமை தான் முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார். காங்கிரஸின் ஒரு தரப்பினர் எங்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், அவர்கள் தவெக-வுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார்.
தற்போதைய சூழலில் காங்கிரஸ் நிர்வாகிகள் இரண்டாகப் பிரிந்துள்ளனர். நேற்று தவெக-விற்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட போது, காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி சட்டமன்ற தேர்தலுக்கான விசில் ஊதப்பட்டு விட்டது என சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் காங்கிரஸின் ஒரு தரப்பினர் தவெக-வில் இணைவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக அரசியல் களத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.